விஜய் சேதுபதி படம் தள்ளிவைப்பு
விஜய் சேதுபதி நடித்த ‘மெர்ரி கிறிஸ்துமஸ்' படத்தை அடுத்த வருடத்துக்கு தள்ளி வைத்து இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.
விஜய் சேதுபதியும் பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப்பும் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை ஶ்ரீராம் ராகவன் டைரக்டு செய்துள்ளார். இவர் ஏற்கனவே இந்தியில் வெற்றி பெற்ற 'அந்தாதூன்' படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தாதூன் படம் தமிழில் 'ரீமேக்' செய்யப்படுகிறது. 'மெர்ரி கிறிஸ்துமஸ்' படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை படக்குழுவினர் மறுத்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகையில் தியேட்டரில் வெளியாகும் என்றும் அறிவித்தனர். ஆனால் திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை. இந்த நிலையில் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' படத்தை அடுத்த வருடத்துக்கு தள்ளி வைத்து இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். தமிழ், இந்தி ஆகிய 2 மொழிகளில் வெளியாகும் என்றும் தெரிவித்து உள்ளனர். படத்தின் தொழில்நுட்ப பணிகள் இன்னும் முடியாததால் தள்ளிவைத்து இருப்பதாக கூறப்படுகிறது.