சென்னையில் ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்' படப்பிடிப்பு தொடங்கியது

ஜெயிலர் படப்பிடிப்பை சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஓட்டலில் நேற்று தொடங்கினர்.

Update: 2022-08-23 10:43 GMT

ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணன், தங்கை பாசத்தை மையப்படுத்தி தயாரான அண்ணாத்த படம் கடந்த வருடம் தீபாவளி பண்டிகையில் வெளியானது. அடுத்து கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கி பிரபலமான நெல்சன் திலீப் குமார் டைரக்டு செய்யும் படத்தில் ரஜினி நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் படம் கைவிடப்படுகிறது என்றும், வேறு இயக்குனர் படத்தில் நடிக்க ரஜினி முடிவு செய்துள்ளார் என்றும் இணைய தளங்களில் தகவல் பரவியது. ஆனால் நெல்சன் இயக்கத்தில் நடிப்பதை ரஜினி உறுதி செய்தார். படத்துக்கு ஜெயிலர் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயிலர் படப்பிடிப்பை சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஓட்டலில் நேற்று தொடங்கினர். அங்கு போலீஸ் நிலைய அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடத்தினர். இதில் ரஜினிகாந்த் பங்கேற்று நடித்தார். சில நாட்கள் இங்கு படப்பிடிப்பை நடத்தி முடித்து விட்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஸ்டுடியோவில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர். ஜெயிலர் படத்தில் வரும் ரஜினிகாந்த் தோற்ற போஸ்டரையும் படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். அந்த போஸ்டரில் ரஜினிகாந்த் 'சால்ட் அண்ட் பெப்பர்' முடி, தாடியுடன் கண்ணாடி அணிந்து கம்பீரமாக நிற்கிறார். இந்த தோற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதனை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். ஜெயிலர், ரஜினிக்கு 169-வது படம். இதில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் வில்லனாக வருகிறார். தமன்னா, பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி ஆகியோரும் உள்ளனர். ஜெயில் அதிகாரியின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது.

Tags:    

மேலும் செய்திகள்