'பொன்னியின் செல்வன்' பிரம்மாண்ட வரவேற்பு - மணிரத்னத்திற்கு தயாரிப்பாளர், விநியோகஸ்தர் நேரில் வாழ்த்து

இயக்குனர் மணிரத்னத்திற்கு தயாரிப்பாளர், விநியோகஸ்தர் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Update: 2022-10-01 14:50 GMT

சென்னை,

எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்பட பல நட்சத்திரங்களைக் கொண்டு பிரம்மாணட பொருட்செலவில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

மொத்தம் 5 பாகங்களைக் கொண்ட பொன்னியின் செல்வன் நாவலை, மணிரத்னம் 2 பாகங்கள் கொண்ட திரைப்படமாக எடுத்துள்ளார். இதன் முதல் பாகம் தமிழ், இந்தி, தெலுங்கும், கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் நேரடியாக வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே 2 வாரங்களுக்கான டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டு சாதனை படைத்தது.

உலகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான பொன்னியின் செல்வன், 2022-ம் ஆண்டு தமிழ்நாட்டில், முதல் நாளில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. அதன்படி இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.75 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.25 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும், இந்திய அளவில் ரூ.42 கோடி வசூல் என தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய தமிழ் படம் என்கிற சாதனையையும் பொன்னியின் செல்வன் படைத்துள்ளது.

திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இயக்குனர் மணிரத்னத்திற்கு தயாரிப்பாளர், விநியோகஸ்தர் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். லைகா நிறுவனத்தின் தலைமை அதிகாரி தமிழ்குமரன், ரெட் ஜெயண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த செண்பகமூர்த்தி உள்ளிட்டோர் மணிரத்னத்தை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர். இந்த சந்திப்பின் போது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் நிர்வாகி சிவா ஆனந்த் உடனிருந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்