பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்து வழக்கு - மீரா மிதுனுக்கு 2-வது முறையாக பிடிவாரண்ட்

பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில் மீரா மிதுனுக்கு 2-வது முறையாக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-06 11:07 GMT

சென்னை,

திரைத்துறையில் உள்ள பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் என்பவருக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகாரளிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரும் ஜாமீனில் விடுதலையாகினர்.

இந்த வழக்கானது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு விசாரணையில் இருக்கிறது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சாட்சிகளின் விசாரணை தொடங்கிய நிலையில், சாட்சிகளும் சாம் அபிஷேக் மற்றும் அவரது வக்கீலும் ஆஜராகினர். ஆனால் மீரா மிதுன் மற்றும் அவரது வக்கீல் ஆஜராகவில்லை.

இதையடுத்து சாட்சி விசாரணைக்கு குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது வக்கீல் ஆஜராகாதது, நீதிமன்றத்தை ஏமாற்றுவது போல் உள்ளது என்று தெரிவித்த நீதிபதி, நடிகை மீரா மிதுனுக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாதபடி வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 29-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதேபோல் விசாரணைக்கு ஆஜராகாததால் மீரா மிதுனுக்கு எதிராக கடந்த மார்ச் 23-ந்தேதி பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்