பாலியல் கொடுமைகளை புத்தகமாக எழுதிய நடிகை
இந்தி நடிகை குப்ரா சேட் தனக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். ஓபன் புக்: நாட் எ மெமைர் என்ற இந்தப் புத்தகத்தில் குடும்ப நண்பர் ஒருவரால் பாலியல் கொடுமைக்கு ஆளானதை விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல இந்தி நடிகை குப்ரா சேட். இவர் சல்மான்கானுடன் ரெடி, சுல்தான், ரன்வீர் சிங்குடன் கல்லி பாய், மாதவனுடன் ஜோடி பிரேக்கர்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். ஸ்கேர்ட் கேம்ஸ் வெப் தொடரில் நடித்தும் பிரபலமானார்.
இந்த நிலையில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை குப்ரா சேட் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். அதில், "இளம் வயதில் எனக்கு நெருங்கிய குடும்ப நண்பர் ஒருவரால் பாலியல் தொல்லைகள் நடந்தன. எங்கள் குடும்பத்தில் பண கஷ்டம் இருந்தது. அதை தீர்த்து வைத்து அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து செல்வார். என்னை முத்தமிட தொடங்கினார். ஒரு முறை அவரது ஓட்டலில் வைத்து என்னை முத்தமிட்டு அத்துமீறினார். சத்தம்போடுவதற்கு பதிலாக குடும்ப சூழ்நிலையால் அமைதியாக இருந்துவிட்டேன். இரண்டரை ஆண்டுகள் அவரது பாலியல் கொடுமைகள் தொடர்ந்தன. எனது படிப்பு முடிந்து துபாயில் குடியேறிய பிறகு அவரது தொல்லைகள் முடிவுக்கு வந்தன. இந்த சம்பவம் குறித்து சில ஆண்டுகளுக்கு பிறகு எனது அம்மாவிடம் சொன்னேன். அவர் அழுதார். என்னிடம் மன்னிப்பும் கேட்டார்'' என்று கூறியுள்ளார். இந்த புத்தகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.