நடிகையை மேக்கப் அறையில் அடைத்து வைத்த தயாரிப்பாளர் - நடிகை பரபரப்பு புகார்
கடந்த ஒன்றரை வருடங்களாக கஷ்டங்களை சந்தித்ததாக நடிகை கிருஷ்ண முகர்ஜி கூறினார்.
சென்னை,
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை கிருஷ்ண முகர்ஜி. தயாரிப்பாளர் தன்னை அறைக்குள் அடைத்து வைத்து துன்புறுத்தியதாக புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எனது மனதில் இருக்கும் விஷயங்களை சொல்ல இத்தனை நாட்கள் தைரியம் வரவில்லை. ஆனால் இப்போது வெளியே சொல்ல முடிவு செய்து விட்டேன்.
கடந்த ஒன்றரை வருடங்களாக கஷ்டங்களை சந்தித்தேன். தனிமையில் இருக்கும்போது அழுதேன். 'சுப் ஷகுன்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நான் பங்கேற்றபோது துன்புறுத்தல் தொடங்கியது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது மோசமான அனுபவம்.
படப்பிடிப்பில் தயாரிப்பாளர் குந்தன் சிங் எனக்கு பல தடவை தொல்லை கொடுத்தார். ஆடைகளை மாற்றும்போது என்னை மேக்கப் அறையில் அடைத்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக 5 மாதங்களாகியும் சம்பளம் கொடுக்கவில்லை.
இதுதொடர்பாக பலரிடம் உதவி கேட்டும் பலன் இல்லை. இதனால் பாதுகாப்பு இல்லாத நிலையில் நொறுங்கி போனேன். எனக்கு நீதி வேண்டும்'' என்று கூறியுள்ளார். இது பரபரப்பாகி உள்ளது.