கடலூரில், யானை திரைப்பட டிரெய்லர் வெளியீடு: நல்ல கதையம்சம் இருந்தால் வில்லனாக நடிக்க தயார் நடிகர் அருண்விஜய் பேட்டி
நல்ல கதையம்சம் இருந்தால் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தயாராக உள்ளதாக கடலூரில் நடந்த யானை திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் அருண்விஜய் கூறினார்.
பிரபல திரைப்பட இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண்விஜய் நடிக்கும் யானை திரைப்படம் அடுத்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி வெளியாகிறது. இந்த படத்தில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இது தவிர சமுத்திரக்கனி, ராதிகா சரத்குமார், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா கடலூர் கிருஷ்ணாலயா தியேட்டரில் நடந்தது. ஜி.ஆர்.கே. குழும நிர்வாக இயக்குனர் ஜி.ஆர். துரைராஜ் தலைமையில் நடந்த இந்த விழாவில் இயக்குனர் ஹரி, நடிகர் அருண்விஜய் ஆகியோர் முன்னிலையில் யானை படத்தின் டிரெய்லர், பாடல் காட்சிகள் திரையில் ஒளிபரப்பப்பட்டன. இதை ரசிகர்கள் மத்தியில் அமர்ந்து ஹரி, நடிகர் அருண்விஜய் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது ரசிகர்கள் உற்சாகத்துடன் அவருடன் செல்பி எடுத்தனர். தொடர்ந்து ஹரி, அருண்விஜய் ஆகிய 2 பேரும் ரசிகர்கள் மத்தியில் யானை படத்தை பற்றி பேசினர். அதையடுத்து இயக்குனர் ஹரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வரவேற்பு
யானை திரைப்பட டிரெய்லர், இசை வெளியீட்டு விழாவை தமிழகம் முழுவதும் தியேட்டர்களுக்கு சென்று பார்வையிட்டு வருகிறோம். யானை படத்தின் கதை மக்களின் மனதை பாதித்து, கதையோடு ஒன்றிவிடுவார்கள் என்று நம்புகிறேன். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும்.
போலீஸ் கதை பற்றி 5 படங்கள் எடுத்து விட்டேன். மீண்டும் அதே கதை பற்றி எடுத்தால் மக்களிடம் வெறுப்பு ஏற்பட்டு விடும். நல்ல கதை அமைய வேண்டும். இதற்காக தான் இந்த இடைவெளி. சிங்கம் படம் 4-ம் பாகம் நல்ல கதை கிடைத்தால் எடுப்பேன். இவ்வாறு இயக்குனர் ஹரி கூறினார்.
வில்லன் கதாப்பாத்திரம்
நடிகர் அருண்விஜய் நிருபர்களிடம் கூறுகையில், யானை படம் என்னை அடுத்த கட்ட நகர்வுக்கு கொண்டு செல்லும். என்னை அறிந்தால் படத்தில் நடிகர் அஜித்துடன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தேன். இது போன்ற நல்ல கதையம்சம் இருந்தால் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தயாராக உள்ளேன். இது போன்ற வித்தியாசமான கதாப்பாத்திரம் கிடைத்தால் நல்லது. இந்த படம் குடும்பபாங்கான, ஆக்ஷன், காதல் போன்ற ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என்றார். பேட்டியின் போது சுமங்கலி நிஸ்டர் அலி, அன்சாரி உடனிருந்தனர்.