கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!

நிஜத்தில் வாழ்க்கையில் லெஸ்பியன் ஜோடி சேர்ந்து வாழ எந்த தடையும் இல்லை என்று கேரள கோர்ட்டு தீர்ப்பு அளித்து இருந்தது.

Update: 2022-08-06 11:17 GMT

திருவனந்தபுரம்

மலையாளத்தில் எப்போதும் தனித்துவமான திரைப்படங்கள் உருவாகும். நுட்பமான காதல் கதைகளை திரையில் காணலாம். தற்போது இரண்டு தோழிகளுக்கு இடையே உள்ள காதலைக்கூறும் ஹோலி வூண்ட் என்ற படம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாஸ்திரி வேடத்தில் இருக்கும் பெண் ஒருவர் தனது தோழியுடன் உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுக்கும் போஸ்டர்கள் கேரளா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

டைரக்டர் அசோக் ஆர்.நாத் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஹோலி வூண்ட் (புனித காயம்). இந்த படத்தில் ஜானகி சுதீர், அம்ருதா வினோத் இருவரும் லெஸ்பியன் தோழிகள் தோற்றத்தில் நடித்துள்ளனர். டிரைலரே இப்படி சூட்டை கிளப்பியுள்ள நிலையில் முழு படமும் எப்படி இருக்க போகிறதோ? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

டிரைலரில் 2 பெண்கள் காமதாகத்தில் தவிப்பதுபோல படுசூடான் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதியில் டிரைலர் படமாக்கப்பட்டிருக்கும் விதமும், கன்னியாஸ்திரி வேடத்தில் இருக்கும் பெண், இன்னொரு பெண்ணின் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பது போலவும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

இதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனக்குரலுடன் களம் இறங்கியுள்ளனர். கிறிஸ்தவர்கள் மத்தியில் இந்த படத்தின் டிரைலர் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

பழைய நெருங்கிய தோழிகள் மீண்டும் சந்தித்துக் கொள்ளும்போது உணர்ச்சி பிரவாகம் தான் இது என்று சினிமா குழுவினர் தெரிவித்து உள்ளனர். லெஸ்பியன் உணர்வு கொண்டவர்களும், தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்களும், மனிதர்கள் தான். அவர்கள் பற்றி வேறு விதமாக சிந்திக்க கூடாது என்பதை படம் உணர்த்துகிறது என்று சினிமா குழுவினர் கூறி இருக்கிறார்கள்.

ஒரினசேர்க்கை குறித்த படங்கள் மலையாளத்தில் அடிக்கடி எடுக்கப்படுவது உண்டு. மோகனின் 'ரெண்டு பெண்குட்டிகள்' (1978) மலையாளத்தில் ஓரினச்சேர்க்கையின் முதல் படம் என்று கூறப்படுகிறது. 1974 ஆம் ஆண்டு விடி நந்தகுமாரின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம், உயர்நிலைப் பள்ளி சீனியரான கோகிலா (அனுபமா மோகன்) தனது ஜூனியர் கிரிஜா (ஷோபா) மீது கொண்ட அன்பைக் காட்டும் படமாக இருந்தது.

1986 ஆம் ஆண்டு வெளியான பத்மராஜனின் 'தேசாதனக்கிளி கரையறில்லா' என்ற படம் =நிம்மி (கார்த்திகா) மற்றும் சாலி (ஷாரி) ஆகிய இரு பெண்களுக்கு இடையேயான நேர்த்தியான உறவை சித்தரித்தபடமாகும்.

லெஸ்பியன் காதலை அழகாகவும், புண்படுத்தாத வகையிலும் வெளிப்படையாக விவாதித்த முதல் மலையாளத் திரைப்படம் 'சஞ்சரம்-தி ஜர்னி'. 2004 இல் வெளியானது.இதனை லிஜி புல்லப்பள்ளி இயக்கி உள்ளார். இதை தொடர்ந்து பல படங்கள் நுட்பமான காதலை வெளிபடுத்தும் படங்கள் வெளியாகி உள்ளன.

நிழலில் இப்படி என்றால் நிஜத்தில் வாழ்க்கையில் லெஸ்பியன் ஜோடி சேர்ந்து வாழ எந்த தடையும் இல்லை என்று கேரள கோர்ட்டு தீர்ப்பு அளித்து இருந்தது. அந்த கதை வருமாறு:-

எர்ணாகுளத்தை அடுத்து உள்ள ஆலுவா பகுதியை சேர்ந்த ஆதிலாவும், பாத்திமாவும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய தோழிகள். இருவரும் சவுதியில் படித்தபோது ஏற்பட்ட பழக்கம் காதலாகி இருக்கிறது. இதனால் நீ இல்லை என்றால் நான் இல்லை. நான் இல்லை என்றால் நீ இல்லை என்ற ரீதியில் 2 பேரும் ஒன்றாக இருக்க தொடங்கினர். இருவருக்கிடையே லெஸ்பியன் உறவு ஏற்பட்டுள்ளது. இதனால் கொந்தளித்த குடும்பத்தினர் இருவரையும் பிரித்தனர். பாத்திமாவை சவுதியில் இருந்து கேரளாவுக்கு அழைத்து வந்து விட்டனர். இதனால் செய்வதறியாது தவித்த ஆதிலா, கேரளாவுக்கு வந்து பாத்திமாவை கண்டுபிடித்து விட்டார்.

இதன் பின்னர் இருவரும் ஒன்றாக வாழ தொடங்கினர். ஆனால் பாத்திமாவின் குடும்பத்தினர் விடவில்லை. பாத்திமாவை, ஆதிலாவிடம் இருந்து மீண்டும் பிரித்து சென்று விட்டனர். இதனால் கோபத்தின் உச்சத்திற்கே சென்ற ஆதிலா கேரளா ஐகோர்ட்டை நாடினார்.

நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறோம். ஆனால் உறவினர்கள் அதற்கு தடையாக உள்ளனர். எங்களை சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட கேரள ஐகோர்ட்டு இருவரும் சேர்ந்து வாழலாம் என்றும் உறவினர்கள் யாரும் எந்த விதத்திலும் இடையூறு செய்யக்கூடாது என்றும் அதிரடி தீர்ப்பை வழங்கியது.

இந்த தீர்ப்பு வந்து சில நாட்களே ஆன நிலையில் சினிமா மூலமாக இன்னொரு லெஸ்பியன் ஜோடி புதிய புயலை கிளப்பி உள்ளது. 

அதற்கு முன் கேரளாவில் பகிரங்கமாக வெளிவந்த முதல் லெஸ்பியன் ஜோடியாக ஸ்ருதி சித்தாரா மற்றும் தயா காயத்ரி இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்