'ஹாரி பாட்டர்' பட டைரக்டரை சந்தித்த கமல்

கமல்ஹாசன் புகழ்பெற்ற இயக்குநர் அல்போன்ஸோ குரானை சந்தித்து பேசிய புகைப்படம் வைரலாகி வருகிறது

Update: 2024-04-13 13:34 GMT

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என படக்குழு சமீபத்தில் தெரிவித்தது. இந்தியன் 2 படத்தில் நாயகிகளாக காஜல் அகர்வால் , ரகுல் ப்ரீத் , பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்கள் . சித்தார்த் , எஸ்.ஜே சூர்யா , பாபி சிம்ஹா உள்ளிட்ட பிற நடிகர்கள் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை லைகா தயாரித்துள்ளது. தேர்தலுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் தக் லைப் படத்தில் நடிக்க இருக்கிறார் கமல்.

கமல்ஹாசனை உலகநாயகன் என்று ரசிகர்கள் அழைப்பதற்கு காரணம் தமிழில் அல்லது இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவில் திரைத்துறையினரால் மாஸ்டர் என்று அங்கீகரிக்கப் படக் கூடியவர் அவர் என்பதே. காட்பாதர் படத்தில் மார்லன் பிராண்டோவைப் போல் அவர் நிகழ்ச்சி ஒன்றில் நடித்து காட்டி கமல் நம்மை ஆச்சரியப் படுத்தினார். சினிமாத் தொடர்பான உரையாடல்களில் கமல் தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறார். உலகம் முழுவதிலும் இருக்கும் நடிகர்கள் இயக்குநர்கள் , தொழில் நுட்ப கலைஞர்களுடம் கலந்துபேசி பிற திரைத்துறையில் சினிமா எந்த கட்டத்தில் இருக்கிறது என்பதை தனக்கு அப்டேட் செய்துகொண்டே இருக்கிறார்.

ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனை கமல் சந்தித்து ஹே ராம் படத்தின் டிஜிட்டல் வடிவத்தை கொடுத்தது குறிப்பிடத் தக்கது. அதேபோல் தற்போது புகழ்பெற்ற மெக்ஸிக்கன் இயக்குநர் அல்போன்ஸ் குரானை சந்தித்து பேசியுள்ளார் கமல்ஹாசன். கிராவிட்டி, ரோமா மற்றும் ஹாரி பாட்டரின் மூன்றாவது பாகம் உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களை இயக்கியவர் அல்போன்ஸோ குரான். இவர் இயக்கிய ரோமா படம் கடந்த 2019-ம் ஆண்டு ஆஸ்கர் விருதை வென்றது.

அல்போன்ஸ் குரான் மற்றும் கமல் சந்தித்து பேசியபோது எடுக்கப் பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா வந்திருந்தபோது ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் அவர் கமலை சந்தித்ததாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்