நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல்கள் வதந்தியே...!
நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல்கள் யாவும் வதந்தியே என சமந்தாவின் செய்தித்தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்,
நடிகை சமந்தா 10 ஆண்டுகளை கடந்து தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார். விஜய், சூர்யா உள்ளிட்ட கோலிவுட் நடிகர்களுடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இதேபோல தெலுங்கிலும் பல சிறப்பான படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு அவர் ஆடிய ஆட்டம் ரசிகர்களை குலுங்க வைத்தது. தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தா, சகுந்தலம் மற்றும் யாசோதா ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார். நடிகை சமந்தா, இப்போது விஜய தேவரகொண்டாவுடன் 'குஷி' படத்தில் நடித்து வருகிறார். இந்தியிலும் நடிக்க இருக்கிறார். அவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் சரும பிரச்சினை ஏற்பட்டது. சமீபத்தில் இவர் மயோடிசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார்.
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் யஷோதா திரைப்பட ப்ரோமஷனுக்காக நேர்காணல் ஒன்றில் பேட்டி அளித்திருந்தார்.
அவர் உடல் நிலை தேறிவிட்டது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.
இந்தநிலையில்,நடிகை சமந்தா தற்போது ஐதராபாத்திலுள்ள அவரது வீட்டில் ஓய்வில் இருக்கிறார் எனவும் நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல்கள் யாவும் வதந்தியே என சமந்தாவின் செய்தித்தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.