2026-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டி - நடிகர் விஷால்
2026ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
அரசியல் வருகை தொடர்பாக நடிகர் விஷால் சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
"வரும் 2026-ம் ஆண்டு அரசியலுக்கு வருவேன். இந்த கட்சியுடன் கூட்டணி, இந்த கட்சியுடன் இத்தனை சீட்டுகள் ஒதுக்கீடு என்பதை யோசிக்க கூடாது. மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று யோசித்தால் அதற்காக மட்டும் தான் அரசியல் கட்சி தொடங்கி செயல்பட வேண்டும். ஆட்சியில் உள்ளவர்கள் மக்களுக்கு நல்லது செய்துவிட்டால் நாங்கள் நடித்துவிட்டு சென்றுவிடுவோம்.
கிராமப்புறங்களில் மக்களுக்கான நலதிட்டங்கள் முழுமையாக கிடைப்பது இல்லை. திமுக, அதிமுக செயல்பாடு என்று குறிப்பிட்டு சொல்லவில்லை. எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் அடிப்படை வசதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
நீங்கள் திமுகவாக இருந்தாலும், அதிமுகவாக இருந்தாலும் நீங்கள் செய்ய வேண்டியது மக்கள் நலப்பணிகள். மக்களுக்கு எதாவது என்றால் அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். எம்எல்ஏ, எம்.பிக்கு எதாவது என்றால் அவர்கள் தனியார் மருத்துவமனையை நாடுவார்களாம். மக்கள்தானே வரி செலுத்துகிறார்கள். அந்த வரிப் பணத்தில் நீங்கள் மட்டும் தனியார் மருத்துவமனைக்குச் செல்வீர்களா? நிறைய பிரச்சினைகள் இங்கே உண்டு. நடிகர் சங்க கட்டிடப்பணிகள் தொடங்கியுள்ளன. இந்த ஆண்டு இறுதியில் கட்டிடப்பணிகள் நிறைவடைந்துவிடும்.
தமிழ்நாட்டில் மாற்றம் என்பது நிச்சயம் தேவைப்படுகிறது. மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்தால், என்னைப் போன்ற வாக்காளர்கள் வாக்களித்துவிட்டு எங்கள் தொழிலை பார்த்துக் கொண்டு சென்று விடுவோம். மேலும், புதிதாக கட்சி தொடங்குவதில் ஆர்வம் காட்ட மாட்டோம்"
இவ்வாறு நடிகர் விஷால் தெரிவித்தார்.
ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள 'ரத்னம்' படத்தின் புரொமோஷன் நிகழ்வில் சேலத்தில் நடைபெற்றது.