சுதா கொங்கரா படத்தில் மீண்டும் சூர்யா
ஹேம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் புதிய படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் சூர்யா இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
மணிரத்னமிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சுதா கொங்கரா, 2008-ம் ஆண்டில் ‘துரோகி' என்ற படத்தை இயக்கினார். 2016-ம் ஆண்டு ‘இறுதிச்சுற்று' படத்தை இயக்கினார். எதிர்பார்ப்பின்றி வெளியான இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 2020-ம் ஆண்டு சூர்யா நடிப்பில் ‘சூரரைப்போற்று' படத்தை இயக்கினார். இந்த படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தியில் இதன் ‘ரீமேக்' படத்தை தற்போது அவர் இயக்கி வருகிறார். அதைத்தொடர்ந்து தமிழில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.
‘கே.ஜி.எப்.' படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து தமிழிலும் படங்களை தயாரித்து வரும் ஹேம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் புதிய படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். ‘‘சில கதைகளை நிச்சயம் கூறவேண்டும். இது நாடு முழுவதும் சென்றடையும். ஒரு புதிய அத்தியாயத்துக்கு, அழுத்தமான கதையுடன் சுதா கொங்கரா இயக்கத்தில், உண்மை சம்பவங்களின் அடிப்படையில் ஒரு கதை’’, என்று அந்த பட நிறுவனம் தனது ‘டுவிட்டர்' பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் சூர்யா இணைய உள்ளதாக கூறப்படுகிறது. வெற்றிமாறனின் ‘வாடிவாசல்' மற்றும் பாலாவின் புதிய படத்துக்கு பிறகு, சுதா கொங்கராவின் படத்தில் சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.