சிவகார்த்திகேயன் ஜோடியாக உக்ரைன் நடிகை
சிவகார்த்திகேயன் ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நடிகை மரியா ரியாபோசப்கா நடிக்கிறார்.
சிவகார்த்திகேயன் இப்போது பெயர் சூட்டப்படாத புதிய படத்தில் நடிக்கிறார். இது, அவர் நடிக்கும் 20-வது படம். படப்பிடிப்பு தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்தப் படத்தில், சிவகார்த்திகேயன் ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நடிகை மரியா ரியாபோசப்கா நடிக்கிறார். படத்தில் இவருடைய பங்களிப்பு மிகப்பெரிதாக அமையும் என்று ஒட்டு மொத்த படக்குழுவினரும் நம்புகிறார்கள்.
மரியா ரியாபோசப்கா, சர்வதேச திரைப்படங்களில் நடித்து பாராட்டுகளைப் பெற்றவர். படத்துக்காக பல கதாநாயகிகள் பரிசீலிக்கப்பட்டு மரியா ரியாபோசப்கா பொருத்தமானவராக இருந்ததால், அவரை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இப்போது படமாகி வருகின்றன.
ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய ‘ஜதி ரத்னதாலு’ என்ற தெலுங்கு படத்தை இயக்கிய அனுதீப் கேவி, இந்தப் படத்தை டைரக்டு செய்கிறார். சத்யராஜ், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயனும், சத்யராஜும் இணைந்து நடிக்கும் படம், இது.
படத்தின் முக்கிய காட்சிகள் காரைக்குடி மற்றும் புதுச்சேரியில் படமாக்கப்படுகிறது.