சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு: மன்னிப்பு கேட்ட வில்லன் நடிகர்
மலையாள நடிகர் விநாயகன் தனது பாலியல் உறவு தொடர்பான கருத்துக்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.
பிரபல மலையாள நடிகர் விநாயகன். இவர் தமிழில் விஷாலுடன் திமிரு படத்தில் வில்லனாக நடித்துள்ளார். சிலம்பாட்டம், சிறுத்தை, மரியான் உள்பட மேலும் சில படங்களிலும் எதிர்மறை வேடங்களில் நடித்து இருக்கிறார். தற்போது நவ்யா நாயருடன் நடித்த ’ஒருத்தி’ மலையாள படம் வெளியாகி இருக்கிறது.
சமீபத்தில் விநாயகன் நிருபர்களை சந்தித்தார். அப்போது மீடூ குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து விநாயகன் கூறும்போது ‘’நான் பத்து பெண்களுடன் பாலியல் ரீதியாக உறவு வைத்து இருக்கிறேன். இதுதான் மீடூ வா? ஒரு பெண்ணை பிடித்து இருந்தால் அந்த பெண்ணை விருப்பத்துக்கு இணங்க அழைப்பேன். அவருக்கு பிடிக்கவில்லை என்றால் முடியாது என்பார்’’ என்றார்.
விநாயகனின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரை பார்வதி உள்ளிட்ட நடிகைகளும், பெண்கள் அமைப்பினரும் கண்டித்தனர். எதிர்ப்பு வலுத்ததால் விநாயகன் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து முகநூலில் வெளியிட்ட பதிவில், ''நான் பெண்களுக்கு எதிராக அதன் தீவிரத்தை அறியாமல் சில கருத்துகளை தெரிவித்து விட்டேன். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறி உள்ளார்.