169-வது படத்தில் ரஜினிகாந்த் மகளாக பிரியங்கா மோகன்?
169-வது படத்தில் ரஜினிகாந்த் மகளாக பிரியங்கா மோகனிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் பரவி உள்ளது.
அண்ணாத்த படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை நெல்சன் இயக்குவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இது ரஜினிக்கு 169-வது படம். குடும்ப கதையம்சத்தில் அதிரடி படமாக தயாராகிறது. நெல்சன் ஏற்கனவே நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனின் டான் படங்களை இயக்கி உள்ளார்.
ரஜினி படத்தில் அவருடன் நடிக்கும் நடிகர்- நடிகைகள் தேர்வு நடக்கிறது. படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளனர். இந்த படத்துக்கு சிவகார்த்திகேயன் பாடல் எழுதுவதோடு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் கசிந்தது. ஆனாலும் இது உறுதிபடுத்தப்படவில்லை. இந்த நிலையில் ரஜினிகாந்த் மகளாக நடிக்க பிரியங்கா மோகனிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் பரவி உள்ளது. பிரியங்கா மோகன் ஏற்கனவே சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.
சமீபத்தில் திரைக்கு வந்த சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்து இருக்கிறார். ரஜினிகாந்த் மகளாக பிரியங்கா மோகன் நடிப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.