ஹாலிவுட் நாயகியாகும் ஆலியா பட்

ஆலியா பட், ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-03-13 14:31 GMT
பாலிவுட் நடிகைகளில் மிகவும் முக்கியமானவராக மாறியிருப்பவர், ஆலியா பட். 2012-ம் ஆண்டு ‘ஸ்டூடண்ட் ஆப் தி இயர்’ என்ற படத்தின் மூலமாக இந்தி சினிமாவுக்குள் நுழைந்த இவர், இதுவரை நடித்துள்ள 12 படங்களிலேயே பாலிவுட்டின் முன்னணி நடிகையாக மாறியிருப்பதுடன், நடிப்பு திறமை வாய்ந்த நடிகைகளில் முக்கியமானவர் என்ற பெயரையும் எடுத்திருக்கிறார்.

பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவரான ராஜமவுலி இயக்கி, வருகிற 25-ந் தேதி வெளியாக உள்ள ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில், ஆலியா பட் நடித்துள்ளார். தவிர பாலிவுட்டில் ‘பிரமாஸ்திரா’, ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் ஹகானி’ என்ற படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் ஆலியா பட், ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘ஹார்ட் ஆப் ஸ்டோன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ஹாலிவுட்டின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் டாம் ஹார்பர் இந்தப் படத்தை இயக்கவுள்ளார். படத்தின் நாயகனாக, ஹாலிவுட்டில் பல காதல் பேசும் படங்களில் நடித்த ஜேமி டோர்னன் நடிக்கிறார்.

பாலிவுட்டில் நடித்து முன்னணி நடிகைகளாக இருந்து வரும் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் ஆகியோர் வரிசையில் தற்போது, ஆலியா பட்டும் ஹாலிவுட் கதாநாயகியாக மாறியிருக்கிறார்.

மேலும் செய்திகள்