சிரஞ்சீவி ஜோடியாக சுருதிஹாசன்
சுருதிஹாசன் தனக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக சிரஞ்சீவி சமூக வலைத்தளத்தில் தெரிவித்து உள்ளார்.
சுருதிஹாசன் நடிப்பில் கடந்த வருடம் லாபம் படம் வெளியானது. மேலும் அவர் நடித்த 3 தெலுங்கு படங்கள், ஒரு இந்தி படம் ஆகியவையும் ரிலீசானது. தற்போது பிரபாஸ் ஜோடியாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் தயாராகும் சலார் படத்தில் நடித்து வருகிறார். ரூ.150 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இந்த படம் உருவாகிறது.
அடுத்து தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா ஜோடியாக புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இது பாலகிருஷ்ணாவுக்கு 107-வது படம். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் சிரஞ்சீவியின் 154-வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சுருதிஹாசனிடம் பேசி வந்தனர்.
வயதான நடிகரான சிரஞ்சீவியுடன் ஜோடிசேர சுருதிஹாசன் சம்மதிப்பாரா என்று சிலர் சந்தேகம் கிளப்பினர். இந்த நிலையில் சுருதிஹாசன் தனக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக சிரஞ்சீவி சமூக வலைத்தளத்தில் தெரிவித்து உள்ளார். இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.