ரஜினியின் படையப்பா 2-ம் பாகம் வருமா?
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி படையப்பா 2-வில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து 1999-ல் வெளியான படையப்பா படம் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை நிகழ்த்தியது. இதில் ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரி என்ற வில்லி வேடத்தில் வந்தார். ரஜினிகாந்தை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு அது நிறைவேறாத வேதனையில் கன்னியாகவே இருந்து கடைசியில் தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளும் அவரது கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இதில் ரஜினிகாந்தின் தந்தையாக சிவாஜி கணேசனும், கதாநாயகியாக சவுந்தர்யாவும் நடித்து இருந்தனர். இந்த படத்துக்கு பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் லிங்கா படத்தில் ரஜினிகாந்த் நடித்து இருந்தார். இவர்கள் கூட்டணியில் தயாராக இருந்த ராணா படம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளியாகி வரவேற்பை பெற்று வருவதால் படையப்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. படையப்பா-2 படத்துக்கான திரைக்கதையை கே.எஸ்.ரவிக்குமார் தயார் செய்து விட்டதாகவும், இதுகுறித்து ரஜினியை தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் தகவல் பரவி வருகிறது. படையப்பா-2 உருவாகுமா என்பது விரைவில் தெரிய வரும்.