‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை முறியடிக்குமா ‘லாக் அப்’
வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்குள் நுழைந்த நிகழ்ச்சிகளில் ஒன்று, ‘பிக்பாஸ்’ என்னும் ரியாலிட்டி ஷோ. இதன் காப்புரிமை கூட இன்னும் வெளிநாட்டு நிறுவனத்திடம்தான் உள்ளது.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி முதன் முதலில் பாலிவுட்டில்தான் தொடங்கப்பட்டது. அங்கு 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, இதுவரை 15 எபிசோடுகளை கடந்துள்ளது. தொடர்ந்து ஓ.டி.டி.யிலும் நடத்தப்பட்டது.
இதே பாணியை தமிழ், மலையாளம், தெலுங்கிலும் பின்பற்றி வருகிறார்கள். தமிழில் 5 எபிசோடுகளைக் கடந்துள்ள ‘பிக்பாஸ்’, தற்போது ஓ.டி.டி.யில் 24 மணி நேரமும் பார்க்கும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியை முறியடிக்கும் வகையில், அதே போன்றதொரு ரியாலிட்டி ஷோவை, இந்தியாவிலேயே உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை, பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தயாரிக்கிறார். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, சர்ச்சை நாயகிகளில் ஒருவரான கங்கனா ரணாவத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நிகழ்ச்சிக்கு ‘லாக் அப்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை, 10-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் சுமார் 100 நாட்களுக்கு வெளி உலக தொடர்பு இன்றி தங்கியிருந்து வாழ வேண்டும். ஆனால் அவர்களுக்குள் வீட்டில் சுதந்திரமாக, சொகுசாக வாழ அனுமதி இருக்கும். ஆனால் இந்த ‘லாக் அப்’ நிகழ்ச்சியானது, ஒரு சிறைவாசம் போல. இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் 72 நாட்கள் சிறையில் அடைக்கப்படுவர். அங்கு எந்த வசதியும் இல்லாமல் அவர்கள் இருக்க வேண்டும் என்பது விதி.
விரைவில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருந்த நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு தடைகேட்டு, ஐதராபாத்தில் உள்ள தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனம் ஒன்று வழக்கு தொடர்ந்திருக்கிறது. அதில், ‘லாக் அப் நிகழ்ச்சி தலைப்பும், அதில் உள்ள போட்டி மற்றும் போட்டிக்கான விதிமுறைகளும் எங்களுக்குரியது. அதை நாங்கள் காப்புரிமை பெற்று பதிவு செய்து வைத்துள்ளோம். எனவே லாக் அப் நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளது. இதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.