கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..!

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

Update: 2022-03-02 22:34 GMT
சென்னை,

நடிகர் விஜய் நடிப்பில் 'மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

விக்ரம் திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கொரோனா ஊரடங்கின் காரணமாகவும் கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தினாலும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தாமதமானது.

இந்த நிலையில் மீண்டும் தொடங்கிய படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், '110 நாட்களுக்குப் பிறகு படப்பிடிப்பு நிறைவடைந்தது. மொத்த படக்குழுவிற்கும் உங்களின் கடினமான உழைப்பிற்கும் என்னுடைய நன்றிகள்' என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், லோகேஷ் ஆக்‌ஷன் சொல்ல பகத் பாசில் துப்பாக்கியால் சுடுகிறார் பின்னர் படக்குழுவினர் அனைவரும் இணைந்து ‘இட்ஸ் ஏ ராப்’ என கூறுகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்