விக்ரமின் 'கோப்ரா' படம் மே மாதம் 26-ந்தேதி ரிலீஸ்..?

நடிகர் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து இயக்குனர் அஜய் ஞானமுத்து கூறியுள்ளார்.

Update: 2022-02-27 15:29 GMT
சென்னை,

'டிமாண்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' ஆகிய திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் திரைப்படம் 'கோப்ரா'. ஸ்பை திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பல கெட்டப்புகளில் தோன்ற இருக்கிறார். 

கோப்ரா படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் இயக்குனர் கே.எஸ். ரவிகுமார், முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், மியா ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இர்பான் பதான் இந்த படத்தில் துருக்கிய இண்டர்போல் அதிகாரியாக நடித்துள்ளார். 

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. 2019-ம் ஆண்டே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. 

இந்த நிலையில் ரசிகர் ஒருவர், 'எல்லா படமும் வெளியாகி வருகிறது. கோப்ரா படம் எப்போது வெளியாகும்' என சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த இயக்குனர் அஜய் ஞானமுத்து, 'கோப்ரா' படத்தை வருகிற மே 26-ந் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி வருகிற மே மாதம் 26-ந்தேதி கோப்ரா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்