படத்தில் ஆபாச காட்சி பிரபல இயக்குனர் மீது போக்சோ வழக்கு
தமிழில் அஜித்குமாரின் ஆரம்பம், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் ஆகிய படங்களில் நடித்தவர் மகேஷ் மஞ்ச்ரேகர். தமிழ், தெலுங்கில் வெளியான பிரபாஸின் ‘சாஹோ’ படத்திலும் நடித்துள்ளார்.
இந்தியில் பிரபல நடிகராகவும், டைரக்டராகவும் உள்ளார். தற்போது, மராத்தி மொழியில் ‘நய் வரன் பாட் லோன்சா கோன் நய் கோன்சா’ என்ற படத்தை மகேஷ் மஞ்ச்ரேகர் டைரக்டு செய்துள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியானது. படத்தின் டிரெய்லர் வெளிவந்தபோதே, அதில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பற்றி அவதூறாகவும், ஆபாசமாகவும் காட்சிகள் இருப்பதாக பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. தேசிய மகளிர் ஆணையமும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதையடுத்து, டிரெய்லர் இணைய தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்த சர்ச்சை காட்சிகளுக்காக மகேஷ் மஞ்ச்ரேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஷத்திரிய மராத்தா சேவா சன்ஸ்தா அமைப்பு, மும்பை பாந்த்ரா மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மகேஷ் மஞ்ச்ரேகர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, மும்பை மாஹிம் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் மகேஷ் மஞ்ச்ரேகர் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.