வாணி போஜன் நடித்த காட்சிகளை கத்திரி போட்டு தூக்கிய மகான் படக்குழு

மகான் படத்தில் விக்ரமுக்கு இன்னொரு ஜோடியாக வாணி போஜன் நடித்திருந்தார். வாணி போஜன் சம்பந்தப்பட்ட காட்சிகளை மொத்தமாக நீக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Update: 2022-02-13 10:31 GMT
விக்ரம்-துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள புதிய படம் ‘மகான்'. கதாநாயகிகளாக சிம்ரன், வாணி போஜன், சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் சமீபத்தில் ஓ.டி.டி. இணையதளத்தில் வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. காரணம் இது விக்ரமுக்கு 60-வது படம் ஆகும்.

இந்த நிலையில் படம் வெளியான பிறகு ரசிகர்களுக்கு வியப்பு மேலோங்கி இருக்கிறது. படத்தில் வாணி போஜன் நடித்த காட்சிகள் எதுவும் இடம் பெறவில்லை. சிம்ரன் மற்றும் சில பெண் கதாபாத்திரங்கள் மட்டுமே படத்தில் இடம்பெற்றுள்ளன. இதனால் ‘வாணி போஜனுக்கு என்ன ஆச்சு?' என்று அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

படத்தில் விக்ரமுக்கு இன்னொரு ஜோடியாக வாணி போஜன் நடித்திருந்தார். படத்தின் நீளம் அதிகமாக இருந்ததால் சில காட்சிகளை வெட்டுவதற்கு படக்குழுவினர் ஆயத்தமானார்கள். முக்கியமான காட்சிகளை வெட்ட முடியாது என்பதால் வாணி போஜன் சம்பந்தப்பட்ட காட்சிகளை மொத்தமாக நீக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நீக்கப்பட்ட அந்த காட்சிகளையும் ‘அன்சீன்' காட்சியாக இணையதளத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இருந்தாலும் தான் நடித்த காட்சிகள் மொத்தமாக நீக்கப்பட்டுள்ளது குறித்து வாணி போஜன் வருத்தத்தில் உள்ளார் என்றும், இது தொடர்பாக நண்பர்கள், உறவினர்களிடம் ஆதங்கப்பட்டு கொள்கிறார் என்றும் பேசப்படுகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து கார்த்திக் சுப்பராஜ் விளக்கமளித்தபோது, ‘சிம்ரனை விக்ரம் பிரிந்த பின்னர் வாணிபோஜனுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது என்றும் இது குறித்த காட்சிகள்படமாக்கப்பட்ட நிலையில் என்றும் வைரஸ் இரண்டாவது அலை காரணமாக பல காட்சிகள் படமாக்க முடியவில்லை என்றும் குறிப்பாக கூட்டம் அதிகமாக உள்ள காட்சிகளை படமாக்க முடியவில்லை என்பதால் வாணிபோஜன் கேரக்டர் படத்திலிருந்து தூக்கப்பட்டுவிட்டதாகவும் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்