அஜித்துக்காக வலிமை கதையில் மாற்றம்: இயக்குனர் வினோத்
வலிமை படத்தின் கதையில் அஜித்துக்காக மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ள தகவலை படத்தின் இயக்குனர் வினோத் தெரிவித்து உள்ளார்.
அஜித்குமார் நடித்துள்ள வலிமை படப்பிடிப்பு முடிந்து தொழில் நுட்ப பணிகள் நடக்கின்றன. இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ‘‘வலிமை படப்பிடிப்பை நாங்கள் மிகுந்த உற்சாகத்தோடு தொடங்கினோம். அதன் பிறகு கொரோனா பரவல் தொடங்கியது. ஒரு படத்தை உருவாக்குவது என்பது கஷ்டமான வேலை. இந்த நிலையில் கொரோனா அந்த கஷ்டத்தை எங்களுக்கு இரண்டு மடங்கு ஆக்கி விட்டது. ஆனாலும் எல்லாரும் விரும்பும் படமாக எடுத்துள்ளோம்.
‘வலிமை’ கதை வேறொரு நடிகருக்காக எழுதியது என்று நான் சொன்னதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் உண்மை இல்லை. வலிமை கதையை நான் நீண்ட காலத்துக்கு முன்பே எழுதி விட்டேன், அஜித் இந்த கதையில் நடிக்க வந்த பிறகு, அவருக்கு ஏற்றவாறு கதையில் மாற்றம் செய்தோம்‘‘ என்றார். அடுத்து மீண்டும் வினோத் இயக்கும் படத்தில் அஜித் நடிக்க உள்ளார். இந்த படம் அதிரடி சண்டை காட்சிகள் குறைவாகவும் வசனம் அதிகமாகவும் உள்ள படமாக இருக்கும் என்று வினோத் தெரிவித்து உள்ளார்.