கொரோனா பாதிப்பு சம்பளத்தை குறைத்த ஹரி, ஹரிஷ் கல்யாண்
இளம் கதாநாயகன் ஹரிஷ் கல்யாணும் சம்பளத்தை குறைத்துள்ளார்.
கொரோனாவால் சினிமா தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. நடிகர்-நடிகைகள் வீடுகளில் முடங்கி உள்ளனர். பாதிப்பை ஈடுகட்ட நடிகர்-நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மலையாள, தெலுங்கு நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று அங்குள்ள தயாரிப்பாளர்கள் வற்புறுத்தி உள்ளனர். இதுபோல் தமிழ் நடிகர்களும் சம்பளத்தை குறைக்க வற்புறுத்தப்பட்டது.
அதன்படி நடிகர் விஜய் ஆண்டனி தனது புதிய படங்களுக்கான சம்பளத்தில் ரூ.3 கோடியை குறைப்பதாக அறிவித்தார். அவரை தொடர்ந்து இளம் கதாநாயகன் ஹரிஷ் கல்யாணும் சம்பளத்தை குறைத்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘கொரோனா அனைத்து துறைகளிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. எனவே அடுத்து வரும் படங்களில் எனது வருமானத்தில் ஒரு பகுதியை விட்டுத்தருகிறேன்’ என்று கூறியுள்ளார்.
இதுபோல் பிரபல டைரக்டர் ஹரியும் சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைப்பதாக அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்த கொரோனா பாதிப்பில் நம் திரையுலகம் மிகுந்த பாதிப்பை அடைந்துள்ளது. நம்முடைய தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்தான் நம் தொழில் மறுபடியும் நல்ல நிலைக்கு திரும்பும். இந்த சூழலை மனதில் கொண்டு நான் அடுத்ததாக இயக்கப்போகும் ‘அருவா’ படத்துக்கு என்னுடைய சம்பளத்தில் 25 சதவீதம் குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
‘அருவா’ படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் சிங்கம் 3 பாகங்கள், ஆறு, வேல் படங்கள் வந்துள்ளன.