மதுவால் புற்றுநோயில் சிக்கினேன் - சுயசரிதையில் மனிஷா கொய்ராலா உருக்கம்
மதுவால் புற்றுநோயில் சிக்கினேன் என சுயசரிதையில் மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.
தமிழில் பம்பாய், இந்தியன், முதல்வன், மும்பை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மனிஷா கொய்ராலா. இந்தியிலும் முன்னணி நடிகையாக இருந்தார். 2 வருடங்களுக்கு முன்பு மனிஷா கொய்ராலாவுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
இப்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். புற்றுநோயில் இருந்து மீண்டதை ‘ஹீல்டு’ என்ற பெயரில் சுயசரிதையாக எழுதி புத்தகமாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
“மோசமான வாழ்க்கை முறையால் புற்றுநோயில் சிக்கினேன். அதன்பிறகு வாழ்க்கை இருண்ட நாட்களாகவே நகர்ந்தன. அதில் இருந்து மீண்டது ஆச்சரியமான விஷயம். ஒரு காலத்தில் எனது காலடியில் உலகம் இருப்பதாக கருதினேன். தொடர் படப்பிடிப்புகளில் பங்கேற்றேன். இதனால் 1999-ல் உடல் அளவிலும் மனதளவிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
அதில் இருந்து மீள மதுபழக்கத்துக்கு அடிமையானேன். எனது நண்பர்கள் அறிவுரை சொல்லியும் கேட்கவில்லை. தவறான முடிவுகளை எடுத்தேன். கோபமும், பதற்றமும் இருக்கும். புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்ட பிறகு மாற்றங்கள் ஏற்பட்டன. அந்த நோயை எனது வாழ்க்கையில் ஒரு பரிசாகவே கருதுகிறேன்.
எனது மனம் தெளிவானது. சிந்தனையும் கூர்மையானது. இப்போது அந்த நோயில் இருந்து முழுமையாக மீண்டு விட்டேன். வாழ்க்கையில் அமைதி ஏற்பட்டு உள்ளது.” இவ்வாறு மனிஷா கொய்ராலா கூறியுள்ளார்.