உழைப்போம் உயர்வோம்!


உழைப்போம் உயர்வோம்!
x
தினத்தந்தி 21 Nov 2023 2:15 AM IST (Updated: 21 Nov 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

நமது இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் உழைப்பேன் என்று உறுதி எடுத்துக்கொள்ளவேண்டும். நாட்டின் வளர்ச்சியில், நாட்டை கட்டமைப்பதில் நானும் பங்கு எடுத்துக்கொள்வேன் என்று அவர்கள் பொறுப்பெடுத்துக் கொள்ளவேண்டும் என்று ‘இன்போசிஸ்’ நிறுவனர் நாராயணமூர்த்தி கூறுகிறார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டசபை மண்டபத்தில், மறைந்த பெருந்தலைவர் காமராஜர் படம் இருக்கிறது. அதன்கீழ் "உழைப்பே உயர்வு!" என்ற பொன்னெழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இருக்கும். கலைஞர் கருணாநிதி ஒரு கடும் உழைப்பாளி. பின்தூங்கி முன் எழும் பழக்கத்தைக் கொண்டவர். இளைஞர்களுக்கு உழைப்பு பற்றி அவர் கூறிய அருமையான அறிவுரையில், "நன்கு கற்று தெளிந்து தேர்ந்து நாம் ஈடுபாடு கொண்ட துறையில் நடுநின்ற நாயகமாய் நாடுபோற்ற திகழ்வோம் என்பதே ஒவ்வொரு இளைஞனும் காணவேண்டிய கனவு. அந்த கனவு காண்பதற்காக உறங்க வேண்டியதில்லை. மாறாக; அந்த கனவு கண்டிட விழித்தெழுக! விழித்தெழுந்தால் மட்டுமே கனவுகள் நிறைவேறும். எதைப்பற்றியும் கனவு காண்பது எளிது; அந்த கனவு கடின உழைப்பின்றி நிறைவேறும் என்பது அரிது! எனக்கு பிடித்த பொன்மொழிகளில் ஒன்று, நீண்ட தூரம் ஓடினால்தான், அதிக உயரம் தாண்டமுடியும் என்பதாகும்'' என்றார்.

'தினத்தந்தி' அதிபர் மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார், 'உழைப்போம் உயர்வோம்' என்று இரண்டே வார்த்தைகளில் எல்லா விழாக்களிலும் எளிமையாக ஓர் அறிவுரையை கூறுவார். ஆக, உழைப்புத்தான் மேன்மையைத்தரும் என்பது ஆன்றோர்கள் இந்த சமுதாயத்துக்கு கூறும் வழிகாட்டுதல்களாகும். விவசாயிகளின் உழைப்புதான் வயிற்று பசியைப்போக்கும் உணவை தருகிறது. தொழிலாளியின் உழைப்புதான் பல பொருட்களின் உற்பத்திக்கு வழிகோலுகிறது. அரசு ஊழியர்களின் உழைப்புதான் நல்ல நிர்வாகத்தை தருகிறது.

இந்தநிலையில், உழைப்பாலேயே உயர்ந்த 'இன்போசிஸ்' நிறுவனர் நாராயணமூர்த்தியிடம், அடுத்த 10 ஆண்டுகள், 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள் குறித்து உங்கள் கண்ணோட்டம் என்ன? என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் பதில் அளிக்கும்போது, "இந்தியாவின் பணி உற்பத்தித்திறன் உலகிலேயே மிக குறைவான உற்பத்தி திறன்களில் ஒன்றாக இருக்கிறது. நாம் நமது பணி உற்பத்தித்திறனை மேம்படுத்தாவிட்டால், அரசாங்கத்தில் லஞ்ச ஊழலை குறைக்காவிட்டால், மிக பிரமாண்டமான வளர்ச்சிகளைக் கொண்ட நாடுகளோடு போட்டியிட முடியாது. எனவே நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், நமது இளைஞர்கள் இது எனது நாடு, நான் வாரத்துக்கு 70 மணி நேரம் உழைப்பேன் என்று உறுதி எடுத்துக்கொள்ளவேண்டும். நாட்டின் வளர்ச்சியில், நாட்டை கட்டமைப்பதில் நானும் பங்கு எடுத்துக்கொள்வேன் என்று அவர்கள் பொறுப்பெடுத்துக் கொள்ளவேண்டும்' என்று பதிலளித்தார்.

வாரத்துக்கு 70 மணி நேர வேலையா?, அது முடியுமா? என்றும், அப்படி 70 மணி நேரம் உழைத்தால் அதற்கு விலையாக உடல்நலத்தை, நல்ல குடும்ப வாழ்க்கையை, மகிழ்ச்சியை, நிறைவான வாழ்க்கையை அல்லவா கொடுக்கவேண்டும் என்று கடும் விமர்சனங்கள் வருகின்றன.

ஆனால், பலர் நாராயணமூர்த்தி தன் அனுபவத்தையே அறிவுரையாக கூறுகிறார். 1981-ம் ஆண்டில் அவரும், 6 என்ஜினீயர்களும் புனேயில் 250 அமெரிக்க டாலர் முதலீட்டில் தொடங்கிய இன்போசிஸ் நிறுவனம்தான், இன்று அவர்களது இரவு பகல் பாராத கடும் உழைப்பால் ஒரு பெரிய ஐ.டி. நிறுவனமாக, பெரிய சாம்ராஜ்யமாக உலகம் முழுவதிலும் பரவி தழைத்தோங்கியுள்ளது என்கிறார்கள். ஆக, வாரம் 70 மணி நேரம் வேலைபார்க்கவேண்டும் என்பதை அது முடியுமா?, முடியாதா? என்று எடுத்துக்கொள்ளாமல், உழைக்கவேண்டும், உழைப்புதான் உயர்வுதரும், உழைப்போம் உயர்வோம் என்று இளைய சமுதாயத்துக்கு கூறும் அறிவுரையாகத்தான் அதை எடுத்துக்கொள்ளவேண்டும். அவர் கூறியதன் கருப்பொருள் உழைப்பு, உழைப்பு, உழைப்புதான்.


Next Story