வாச்சாத்தி தீர்ப்பு தந்த பாடம்


வாச்சாத்தி தீர்ப்பு தந்த பாடம்
x

31 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்துக்கு ஒரே நேரத்தில் 215 பேருக்கு தண்டனையை உறுதி செய்து பரபரப்பான தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு வழங்கியது.

31 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்துக்கு ஒரே நேரத்தில் 215 பேருக்கு தண்டனையை உறுதி செய்து பரபரப்பான தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு வழங்கியது. ஒரே நேரத்தில் இத்தனை பேருக்கு அதுவும் அரசு ஊழியர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கிய தீர்ப்பு இந்தியாவில் எங்கும் இதுவரையில் நடந்தது இல்லை.

ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது, 1992-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தர்மபுரி மாவட்டம் கல்வராயன் மலைத்தொடரின் அடிவாரப்பகுதியில் உள்ள வாச்சாத்தி என்ற கிராமத்தில் உள்ளவர்கள் சந்தன மரத்தை வெட்டுவதிலும், சந்தன கடத்தலிலும் அதிகமாக ஈடுபட்டு வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி 155 வனத்துறையினர், 108 காவல்துறையினர், 6 வருவாய் துறையினர் என 269 பேர் கூட்டாகச் சேர்ந்து அந்தக் கிராமத்தில் அதிரடிச் சோதனை நடத்தினர். அப்போது அந்தப் படையினர் வீடு வீடாகப் புகுந்து பொருட்களைச் சூறையாடியதாகவும், 90 பெண்கள் உள்பட 133 பேரைக் கைது செய்து அங்கிருந்த ஆலமரத்தடிக்கு கொண்டு வந்த பின், மாலையில் அவர்களில் 18 இளம்பெண்களை மட்டும் ஏரிக்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தனக்கட்டைகளை எடுத்துத்தருமாறு அழைத்துக்கொண்டு போய் அவர்களை ஏரிக்கரையில் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த கொடுமையில் 17 பேர் ஈடுபட்டதாகவும், அவர்கள் கற்பழித்ததில் 13 வயது சிறுமி, 8 மாத கர்ப்பிணியும் அடங்குவார்கள் என்றும் கூறப்பட்டது. சி.பி.ஐ. இந்த வழக்கை மிக தீவிரமாக புலன் விசாரணை செய்து 269 பேரையும் கைது செய்து, தர்மபுரி முதன்மை செசன்சு கோர்ட்டில் ஆஜர்படுத்தியது. நீதிபதி எஸ்.குமரகுரு 2011-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந்தேதி தீர்ப்பை வழங்கினார். 12 பேருக்கு 10 ஆண்டுகளும், 5 பேருக்கு 7 ஆண்டுகளும் மற்றவர்களுக்கு 1 முதல் 3 ஆண்டுகளும் என 215 பேருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இந்த தண்டனையை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்ய, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், வாச்சாத்தி கிராமத்துக்கே நேரில் சென்று விசாரித்தபின் பரபரப்பான தீர்ப்பை 12 ஆண்டுகளுக்கு பிறகு வழங்கினார். செசன்சு கோர்ட்டு அளித்த தண்டனையை உறுதிசெய்ததோடு மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும், அவர்களுக்கு அரசு வேலை அல்லது சுய தொழில் செய்ய உதவி வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்ததோடு, குற்றம் சாட்டப்பட்ட அரசு ஊழியர்களை காப்பாற்றும் நோக்கிலும் அப்போதைய அரசு செயல்பட்டது கண்டனத்துக்குரியது என்று பதிவு செய்தார்.

இந்த வழக்கை மிக ஆழமாக ஆராய்ந்து, நேரில் வாச்சாத்தி கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தி தீர்ப்பளித்த ஐகோர்ட்டு நீதிபதி பி.வேல்முருகனும், ஐகோர்ட்டே உறுதிசெய்யும் வகையில் மிக நுண்ணியமாக தீர்ப்பை எழுதிய செசன்சு கோர்ட்டு நீதிபதி எஸ்.குமரகுருவும், திறமையாக புலன் விசாரணை செய்த சி.பி.ஐ.யும் மிகவும் பாராட்டுக்குரியவர்கள். அரசு ஊழியர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையும், பாடமுமாகும். மலைவாழ் மக்கள் சந்தன கடத்தலில் ஈடுபடக்கூடாது என்றால், அவர்களுக்கு தகுந்த வாழ்வாதாரத்தை அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். தாமதமானாலும் நீதி கிடைக்கும், மறுக்கப்படாது என்பதற்கு இந்த வழக்கின் தீர்ப்பு ஓர் எடுத்துக்காட்டு.


Next Story