முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி: 113 பதக்கம் குவித்து சென்னை மாவட்ட அணி முதலிடம்
தேசிய கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற தமிழக அணிக்கு முதல்-அமைச்சர் ரூ.60 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
சென்னை,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் சென்னையில் 17 இடங்களில் கடந்த 1-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. கபடி, சிலம்பம், கிரிக்கெட், ஆக்கி, கால்பந்து, கைப்பந்து உள்பட 15 வகையான விளையாட்டுகளில் மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் இருந்து ஏறக்குறைய 27 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
25 நாட்கள் அரங்கேறிய இந்த போட்டியில் சென்னை மாவட்ட அணி 61 தங்கம், 33 வெள்ளி, 19 வெண்கலம் என்று மொத்தம் 113 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றது. செங்கல்பட்டு மாவட்டம் 55 பதக்கத்துடன் (18 தங்கம், 19 வெள்ளி, 18 வெண்கலம்) 2-வது இடத்தையும், கோவை 52 பதக்கத்துடன் (15 தங்கம், 13 வெள்ளி, 24 வெண்கலம்) 3-வது இடத்தையும், திருவள்ளூர் 32 பதக்கத்துடன் 4-வது இடத்தையும் (11 தங்கம், 11 வெள்ளி, 10 வெண்கலம்), ஈரோடு 24 பதக்கத்துடன் (10 தங்கம், 6 வெள்ளி, 8 வெண்கலம்) 5-வது இடத்தையும் பிடித்தன.
போட்டியின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுக்கோப்பைகளை வழங்கினார். மேலும், அண்மையில் பஞ்சாப்பில் நடந்த தேசிய சீனியர் பெண்கள் கால்பந்து போட்டியில் அரியானாவை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை வென்று சாதித்த தமிழக வீராங்கனைகளுக்கு உரிய ஊக்கத்தொகையாக ரூ.60 லட்சத்துக்கான காசோலையை வழங்கி பாராட்டினார். விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.