உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதி போட்டி: சூப்பர் சிக்ஸ் சுற்று முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே-ஓமன் மோதல்


உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதி போட்டி: சூப்பர் சிக்ஸ் சுற்று முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே-ஓமன் மோதல்
x

உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதி போட்டியில் ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்று இன்று தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே-ஓமன் அணிகள் மோதுகின்றன.

புலவாயோ,

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் இருந்து ஜிம்பாப்வே (8 புள்ளி), நெதர்லாந்து (6 புள்ளி), வெஸ்ட்இண்டீஸ் (4 புள்ளி) அணிகளும், 'பி' பிரிவில் இருந்து இலங்கை (8 புள்ளி), ஸ்காட்லாந்து (6 புள்ளி), ஓமன் (4 புள்ளி) அணிகளும் முறையே முதல் 3 இடங்களை பிடித்து 'சூப்பர் சிக்ஸ்' சுற்றுக்கு முன்னேறின. நேபாளம், அமெரிக்கா (ஏ பிரிவு), அயர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் (பி பிரிவு) அணிகள் முறையே 4-வது, 5-வது இடத்தை பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தன.

இந்த தொடரில் ஒருநாள் ஓய்வுக்கு பிறகு 'சூப்பர் சிக்ஸ்' சுற்று இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதில் ஒவ்வொரு அணியும், தங்களுடைய எதிர்பிரிவில் இருந்து முன்னேறிய அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதுடன், இந்தியாவில் அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை நடைபெறும் 13-வது 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்.

'சூப்பர் சிக்ஸ்' சுற்று ஆட்டத்தை எல்லா அணிகளும் சமநிலையில் தொடங்காது. அதாவது சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கும் ஒரு அணி தனது பிரிவில் இருந்து முன்னேற்றம் கண்ட அணிகளுக்கு எதிராக லீக் சுற்றில் பெற்ற வெற்றிக்கான புள்ளி சூப்பர் சிக்ஸ் சுற்றில் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். இதன்படி லீக் சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் தலா 4 புள்ளிகளுடனும், ஸ்காட்லாந்து, நெதர்லாந்து அணிகள் தலா 2 புள்ளிகளுடனும், வெஸ்ட்இண்டீஸ், ஓமன் அணிகள் புள்ளி எதுவும் இல்லாமலும் சூப்பர் சிக்ஸ் சுற்றில் களம் காணுகின்றன.

2 முறை உலக சாம்பியனான வெஸ்ட்இண்டீஸ் அணி லீக்கில் ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகளிடம் தோல்வி கண்டதால் அந்த அணிக்கு புள்ளி எதுவும் கிடைக்கவில்லை. எனவே வெஸ்ட்இண்டீஸ் அணி சூப்பர் சிக்ஸ் சுற்றில் தனது 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாலும் உலகக் கோப்பை போட்டிக்கு முன்னேற முடியாது. வெற்றி பெறுவதுடன் மற்ற அணிகளின் முடிவுகளும் சாதகமாக அமைந்தால் தான் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி காண முடியும். ஆனால் இலங்கை, ஜிம்பாப்வே அணிகளை பொறுத்தமட்டில் தங்களது 3 லீக் ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற்றாலே எந்தவித சிக்கலுமின்றி இறுதிப்போட்டிக்குள் நுழைவதுடன், உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்று விட முடியும். பந்து வீச்சில் சுமாராக செயல்பட்டு வரும் வெஸ்ட்இண்டீஸ் அணி பீல்டிங்கில் சொதப்புகிறது. அத்துடன் ரன்ரேட்டிலும் மோசமான நிலையில் (ரன்ரேட்-0.350) இருக்கிறது. இதனால் ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணி இந்த போட்டி தொடரில் இறுதி சுற்றுக்குள் நுழைவதே பெரிய கேள்விக்குறி தான்.

இந்த நிலையில் சூப்பர் சிக்ஸ் சுற்றில் இன்று நடைபெறும் முதலாவது ஆட்டத்தில் ஜிம்பாப்வே-ஓமன் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி புலவாயோவில் இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு தொடங்குகிறது. கிரேக் எர்வின் தலைமையிலான ஜிம்பாப்வே அணி 4 லீக் ஆட்டங்களிலும் வாகை சூடிய உத்வேகத்துடன் களம் இறங்குகிறது. அத்துடன் உள்ளூர் சூழலும் அந்த அணிக்கு கூடுதல் வலுசேர்க்கும். ஜீஷன் மசூத் தலைமையிலான ஓமன் அணி லீக் சுற்றில் 2 வெற்றி (அயர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக), 2 தோல்வியுடன் இலங்கை, ஸ்காட்லாந்து அணிகளிடம்) அடியெடுத்து வைக்கிறது. இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணியின் கை ஓங்கவே அதிக வாய்ப்புள்ளது.


Next Story