பெண்கள் சேலஞ்ச் கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் சூப்பர் நோவாஸ்- வெலோசிட்டி அணிகள் இன்று பலப்பரீட்சை
பெண்கள் சேலஞ்ச் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சூப்பர் நோவாஸ்- வெலோசிட்டி அணிகள் இன்று மோத உள்ளன.
புனே,
பெண்களுக்கான 4-வது சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி புனேயில் நடந்து வருகிறது. பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த போட்டியில் பங்கேற்ற 3 அணிகளும் தலா ஒரு முறை மோதின. இதன் முடிவில் முன்னாள் சாம்பியன் சூப்பர் நோவாஸ், வெலோசிட்டி, நடப்பு சாம்பியன் டிரையல் பிளாசர்ஸ் ஆகிய அணிகள் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் சமநிலை வகித்தன. ரன்ரேட் அடிப்படையில் சூப்பர் நோவாஸ்- வெலோசிட்டி அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இந்த நிலையில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர் நோவாஸ் அணி, தீப்தி ஷர்மா தலைமையிலான வெலோசிட்டியை சந்திக்கிறது. வெலோசிட்டி ஏற்கனவே லீக்கில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பர் நோவாசை வீழ்த்தியிருக்கிறது.
இந்த ஆட்டத்தில் ஷபாலி வர்மா, லாரா வோல்வார்த் அரைசதம் அடித்து அசத்தினர். இதனால் வெலோசிட்டி வீராங்கனைகள் கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணுவார்கள். வெலோசிட்டி இதற்கு முன்பு இந்த கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் பிரியா பூனியா, டியாந்திர டோட்டின், ஹர்லீன் தியோல், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், தானியா பாட்டியா, பூஜா வஸ்ட்ராகர், சோபிஎக்லெஸ்டோன் போன்ற முன்னணி வீராங்கனைகள் சூப்பர் நோவாஸ் அணியில் அங்கம் வகிப்பதால் அவர்களும் முழு வேட்கையுடன் வரிந்து கட்டுவார்கள் என்பதால் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.