டி20 உலகக்கோப்பைக்கான அணியில் விராட் கோலி நிச்சயம் இடம்பிடிப்பார் - முன்னாள் தேர்வுக்குழு தலைவர்
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து விராட் கோலி நீக்கப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது.
புதுடெல்லி,
2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 1 முதல் 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. 29 நாட்கள் நடைபெறும் டி20 உலகக்கோப்பை போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சமீபத்தில் வெளியிட்டது.
இந்நிலையில் மேற்கிந்திய தீவுகளில் உள்ள மைதானம், விராட் கோலிக்கு சாதகமாக அமையாது என்ற காரணத்தாலும், டி20 போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது. மேலும் இதுகுறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவரான எம்.எஸ்.கே பிரசாத் விராட் கோலி இல்லாமல் டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணி செல்லாது என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்:-
'டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு விராட் கோலி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர். ஐ.பி.எல். தொடரில் அவர் சிறப்பாக விளையாடினால்தான் உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்படுவார் என்று நீங்கள் நினைப்பது தவறு. விராட் கோலி எப்போதுமே பார்மில்தான் இருந்து வருகிறார். அவருடைய தரத்தில் எந்த ஒரு குறைபாடும் கிடையாது. நீண்ட காலமாகவே சிறப்பான பார்மில் இருக்கும் அவர் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நிச்சயம் முக்கிய வீரராக இடம் பிடிப்பார்' என்று கூறினார்.