ஆலி போப் அபார சதம்... 3வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி 126 ரன்கள் முன்னிலை
3வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் எடுத்தது.
ஐதராபாத்,
இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 246 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடி வந்த இந்திய அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்கள் எடுத்து 175 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 81 ரன்களுடனும், அக்சர் படேல் 35 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் ஆடிய ஜடேஜா 87 ரன் எடுத்த நிலையில் ரூட் பந்துவீச்சில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய பும்ரா டக் அவுட் ஆனார். இதையடுத்து முகமது சிராஜ் களம் இறங்கினார். இறுதியில் இந்திய அணி 121 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 436 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 87 ரன், ராகுல் 86 ரன், ஜெய்ஸ்வால் 80 ரன் எடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி 190 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து 190 ரன்கள் பின்னிலையுடன் இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்சை விளையாடியது.
தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய ஜாக் கிராலி 31 ரன்களும், பென் டக்கெட் 47 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர் .
தொடர்ந்து ஜோ ரூட் 2 ரன்களும் , பேர்ஸ்டோ 10 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 6 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர் . பின்னர் ஆலி போப் நிலைத்து ஆடினார். பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி அணியை சரிவில் இருந்து மீட்டார். தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய ஆலி போப் சதமடித்து அசத்தினார்.
3வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் எடுத்தது. ஆலி போப் 148 ரன்களும், ரெகன் அகமது 16 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.
இந்தியா சார்பில் அஸ்வின், பும்ரா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.