ஐபிஎல்: பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக ட்ரெவர் பெய்லிஸ் நியமனம்
பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக ட்ரெவர் பெய்லிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 15 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. இதுவரை நடந்த சீசன்களில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் அதிக முறை பட்டங்கள் வென்றுள்ளன. சீசன் ஆரம்பத்தில் இருந்து இதுவரை பெங்களூரு, டெல்லி, பஞ்சாப் அணிகள் விளையாடி வருகின்றன. ஆனால் அந்த அணிகளால் இன்னும் ஒரு பட்டம் கூட வெல்ல முடியவில்லை.
இதில் பஞ்சாப் அணி பல்வேறு கேப்டன்களையும், பயிற்சியாளர்களையும் மாற்றி பார்த்தும் இன்னும் ஒரு பட்டம் கூட வெல்ல முடியவில்லை. இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு அனில் கும்ப்ளேவை பஞ்சாப் அணி பயிற்சியாளராக நியமித்தது. ஆனால் கடந்த 3 சீசன்களாக அந்த அணி பிளே-ஆப் சுற்றுக்கு கூட முன்னேறவில்லை.
இந்நிலையில் அந்த அணியின் பயிற்சியாளர் கும்ளேவை அடுத்த ஐபிஎல் சீசனுக்கு முன் மாற்ற போவதாக சில தகவல்கள் வந்தன. இந்நிலையில் பஞ்சாப் அணியின் புதிய பயிற்சியாளராக ட்ரெவர் பெய்லிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ட்ரெவர் பெய்லிஸ் அடுத்த ஐபிஎல் சீசனில் இருந்து பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக செயல்படுவார் என கூறியுள்ளது. ட்ரெவர் பெய்லிஸ் கடந்த 2012 மற்றும் 2014 ம் ஆண்டு கொல்கத்தா அணி சாம்பியன் பட்டன் வென்ற போது அந்த அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். மேலும், இவர் 2019ம் ஆண்டு உலக கோப்பை வென்ற இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் பதவி குறித்து ட்ரெவர் பெய்லிஸ் கூறியதாவது:-
பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி எனக்கு கிடைத்ததை நினைத்து பெருமை அடைகிறேன். பஞ்சாப் அணியில் உள்ள திறமையான வீரர்களுடன் இணைந்து பணியாற்ற கிடைத்த வாய்ப்பை எதிர்நோக்குகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.