உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: இலங்கை, ஓமன் அணிகள் வெற்றி


உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: இலங்கை, ஓமன் அணிகள் வெற்றி
x

உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றில் அமீரகத்தை தோற்கடித்து இலங்கை வெற்றியோடு தொடங்கியது. மற்றொரு ஆட்டத்தில் அயர்லாந்துக்கு ஓமன் அணி அதிர்ச்சி அளித்தது.

புலவாயோ,

உலகக் கோப்பை தகுதி சுற்று

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயின் ஹராரே மற்றும் புலவாயோ நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நேபாளம், நெதர்லாந்து, அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, 'பி' பிரிவில் அயர்லாந்து, ஓமன், ஸ்காட்லாந்து, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றை எட்டும். சூப்பர்சிக்ஸ் சுற்றில் இருந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரு அணிகள் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெறும்.

தகுதி சுற்றில் புலவாயோவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கை அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் டாப்-4 வீரர்களான பதும் நிசாங்கா (57 ரன்), கருணாரத்னே (52 ரன்), விக்கெட் கீப்பர் குசல் மென்டிஸ் (78 ரன், 63 பந்து, 10 பவுண்டரி), சமரவிக்ரமா (73 ரன்) ஆகியோர் அரைசதம் அடித்து பட்டையை கிளப்பினர். சாரித் அசலங்கா (48 ரன், 5 பவுண்டரி, 2 சிக்சர்), ஹசரங்காவும் (23 ரன்) கணிசமான பங்களிப்பை அளிக்க, இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 355 ரன்கள் குவித்தது.

ஹசரங்கா 6 விக்கெட்

அடுத்து களம் இறங்கிய ஐக்கிய அரபு அமீரகம் சுழல் தாக்குதலை சமாளிக்க முடியாமல் 39 ஓவர்களில் 180 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் இலங்கை 175 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது. சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா 8 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 24 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். ஹசங்காவின் சிறந்த பந்து வீச்சு இதுவாகும். இதற்கு முன்பு அவர் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியதில்லை. அவரே ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் அயர்லாந்து-ஓமன் அணிகள் மோதின. 'டாஸ்' ஜெயித்த ஓமன் கேப்டன் ஜீஷன் மசூத் முதலில் அயர்லாந்தை பேட் செய்ய அழைத்தார். இதன்படி முதலில் பேட் செய்த அயர்லாந்து 7 விக்கெட்டுக்கு 281 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜார்ஜ் டாக்ரெல் 91 ரன்கள் (89 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார்.

ஓமன் வெற்றி

பின்னர் கடின இலக்கை நோக்கி களம் புகுந்த ஓமன் அணி காஷ்யப் பிரஜாபதி ( 72 ரன், 74 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), அக்விப் இலியாஸ் (52 ரன்), கேப்டன் ஜீஷன் மசூத் (59 ரன்), முகமது நதீம் (46 ரன்) ஆகியோரின் மிரட்டலான பேட்டிங்கால் அயர்லாந்துக்கு 'செக்' வைத்தது. அந்த அணி 48.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 285 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஒரு அணிக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட்டில் ஓமன் பெற்ற முதல் வெற்றி இதுதான். அந்த அணியின் வெற்றிக்கு வித்திட்ட தொடக்க ஆட்டக்காரர் காஷ்யப் பிரஜாபதி, குஜராத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்டங்களில் ஜிம்பாப்வே-நெதர்லாந்து (பகல் 12.30 மணி), நேபாளம்-அமெரிக்கா (பகல் 12.30 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story