'இந்திய அணிக்கு எதிராக மோசமான வரலாற்றை மாற்ற முடியாவிட்டாலும் வெற்றிக்காக போராடியிருக்கலாம்' - ரமீஸ் ராஜா


இந்திய அணிக்கு எதிராக மோசமான வரலாற்றை மாற்ற முடியாவிட்டாலும் வெற்றிக்காக போராடியிருக்கலாம் - ரமீஸ் ராஜா
x

இந்திய அணிக்கு எதிராக மோசமான வரலாற்றை மாற்ற முடியாவிட்டாலும் வெற்றிக்காக போராடியிருக்கலாம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அகமதாபாத்,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா 3-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. அதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 191 ரன்களில் சுருண்டது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயரின் ஆட்டத்தால் 30.3 ஓவரில் 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிராக மோசமான வரலாற்றை மாற்ற முடியாவிட்டாலும் வெற்றிக்காக போராடியிருக்கலாம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஏனெனில் இந்த தோல்வி மனதளவில் வலியை கொடுப்பதாக தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு;-

"இந்த தோல்வி அணியை காயப்படுத்தும். ஏனெனில் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்து துறைகளிலும் வீழ்த்தப்பட்டனர். இது போன்ற ஆட்டங்களில் உங்களால் வெல்ல முடியாவிட்டாலும் பரவாயில்லை குறைந்தபட்சம் வெற்றிக்காக போராடுங்கள். ஆனால் பாகிஸ்தானால் அதை செய்ய முடியவில்லை.

இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது ரசிகர்கள் உட்பட அனைத்தும் உங்களுக்கு எதிராக இருக்கும் என்பதை புரிந்து கொள்கிறேன். ஆனால் பாகிஸ்தானை 4 – 5 வருடங்கள் வழி நடத்தியுள்ள பாபர் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். மறுபுறம் உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தங்களுடைய வெற்றி பயணத்தை தொடர்வதை பாராட்ட வேண்டும்" என்று கூறினார்.


Next Story