நிதிகளின் அதிபதி
புதனுக்குரிய அதிதேவதையாக குபேரர் விளங்குகிறார். புதனுக்குரிய பச்சை நிறம் குபேரருக்கு விருப்பமானது.
பிரம்மாவின் மனதில் இருந்து புலஸ்தியர் என்ற மகன் தோன்றினார். இவருக்கு விச்வரஸ் என்ற மகன் பிறந்தார். விச்வரஸ் முனிவராயினும், சுமாலி என்ற அரக்கனின் மகள் கேகஸியைத் திருமணம் செய்து கொண்டார். இதனால் தாயின் குணநலத்துடன் மூன்று பிள்ளைகள் பிறந்தனர்.
அவர்களே ராவணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை ஆகியோர். இதன் பின் விபீஷணன், குபேரன் ஆகியோர் பிறந்தனர். இக்குடும்பத்தில் பிறந்த ஆண்மக்களில் ராவணனும், குபேரனும் சிவ பக்தர்கள். கும்பகர்ணன் தன் கொள்ளுத் தாத்தா பிரம்மாவின் பக்தன். விபீஷணன் பெருமாள் பக்தன்.
இது எதிலும் சேராமல் பெண் என்ற சொல்லுக்கே களங்கம் ஏற்படுத்திய சூர்ப்பனகைக்கு பக்தியும் கிடையாது. பெண்ணுக்குரிய நாணமும் இல்லை. ராவணன் சிவபக்தனாயினும் பெண் பித்தன். கும்பகர்ணன் சாப்பாட்டு ராமன். விபீஷணனும், குபேரனும் தப்பிப் பிறந்தவர்கள். அசுரகுணங்கள் எதுவும் ஒட்டிக் கொண்டிருக்கவில்லை. ராவணன், சிவ பெருமானிடம் மனிதரைத் தவிர பிறரால் அழியக்கூடாது என்ற வரம் பெற்றவன். குபேரன் தன் சிவபக்தியால் வடதிசைக்கு அதிபதி ஆனவன்.
மேலும் சிவபெருமான் உலகத்து செல்வம் முழுவதையும் அவனிடம் ஒப்படைத்து, உழைக்கின்ற மக் களுக்கு, அவரவர் விதிப்பயனுக்கேற்ப செல்வத்தைக் கொடுத்து வர கட்டளையிட்டார். இந்நிலையில், திருமாலின் மனைவியான மகாலட்சுமி, எட்டுவிதமான சக்திகளைப் பெற்றாள்.
தனம், தான்யம், சந்தானம் உள்ளிட்ட எட்டுவித சக்தி பெற்ற இவளது சக்திகள் அனைத்தையும் சங்கநிதி, பதுமநிதி என்ற தேவர்களிடம் ஒப்படைத்தாள். இவர்களை தன் கணக்கு பிள்ளைகளாக நியமித்துக் கொண்டார் குபேரன்.
குபேரன் அரசாட்சி நடத்த, அழகாபுரி என்ற பட்டணத்தை தேவசிற்பியான விஸ்வகர்மா உருவாக்கி கொடுத்தார். இங்கு ஒரு அரண்மனை கட்டப்பட்டது. இந்த அரண்மனையில் இருந்த அத்தாணி மண்டபத்தில் தாமரை மலர் ஏந்தி, மீன் ஆசனத்தில் போடப்பட்ட பட்டு மெத்தை மீது அமர்ந்து ஆட்சி செலுத்தினார் குபேரன்.
கிரீடம், தங்க ஆபரணம் அணிந்து முத்துக்குடையின் கீழ் அமர்ந்த இவர், கையால் அபயமுத்திரை காட்டுவார்.
அதாவது, பணக்கஷ்டத்தால் துன்பப்படுபவன் இதுவரையில் கொடிய பாவங்கள் செய்யாமல் இருந்தால் அவனை ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆக்குவது இவரது பணி.
இவரது வலதுபுறத்தில் சங்கநிதியும், இடதுபுறம் பதுமநிதியும் இருப்பார்கள். சங்கநிதி கையில் சங்கு வைத்திருப்பான். இவன் தான் குபேரனிடம் செல்வம் பெற அனுமதி கொடுப்பவன். இவனது கை வர முத்திரை தாங்கி இருக்கும், பதுமநிதியின் கையில், தாமரை இருக்கும். தாமரையும், சங்கும் செல்வத்தின் அடையாளங்கள்.
குபேரன் உருவ அமைப்பு: குபேரன், சிறுத்த சிவந்த உருவமும் பருத்த வடிவமும் கொண்டவர். இவரது துணைவி சித்ரலேகா. தலையில் கிரீடம் ஆபரணங்கள் அணிந்து முத்துக்குடையின் கீழ் சிம்மாசனத்தில் குபேரன் அமர்ந்திருக்கிறார். அந்தச் சிம்மாசனம் தாமரை மலர் மீது மீனாசனம் அமைத்து அதன் மேல் மெத்தை விரிக்கப்பட்டிருக்கும். அவர் காலின் கீழ் அவரது வாகனமான குதிரை இருக்கும்.
குபேரனின் ஒரு கை அபயமுத்திரையைக் காட்டும். இன்னொரு கை பாம்புக்குப் பகைவனான கீரியைத் தொட்டுக் கொண்டிருக்கும். சில சித்திரங்களில் கீரிக்குப் பதிலாக கைக்குடை ஒன்றை வைத்திருப்பார். இது இறைத்தன்மைக்குரிய, அதாவது அரசனுக்குரிய அடையாளம். குபேரன் எங்கு பறந்து சென்றாலும் தங்கம், முத்து ஆகியவை வழி நெடுக சிதறிக் கொண்டே போகும் என்பார்கள்.
அவர் தன் வாய் வழியே ரத்தினங்களை உமிழ்ந்து செல்வதாலேயே இது நடைபெறுகிறது. கீழே உள்ள பாத்திரங்களில் நவரத்தினக் குவியல்கள் காணப்படும். அதோடு குபேர யந்திரத்துடன் குபேரன் காட்சியளிக்கிறார். குபேரனுக்கு மொத்தம் ஒன்பது பொருளாளர்கள் உள்ளனர்.
குபேரன் ஒரு சமயம் எல்லா சிவாலயங்களுக்கும் தன் புஷ்பக விமானத்தில் சென்று வழிபட்டுக் கொண்டிருந்தான். ஒரு முறை காவேரி நதிக்கரையில் மான், புலி, பசு, யானை, பாம்பு மற்றும் எலி ஆகியவை ஒரே இடத்தில் தங்கள் பகை உணர்வை காட்டாமல் நீர் அருந்திக் கொண்டிருந்தன.
அந்த நதிக்கரையருகே ஓர் இலந்தை மரமும் இருந்தது. `இலந்தை மரத்தின் அடியில் ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அதை வெளியே எடுத்து முறையாக நீ என்னை வழிபட்டால், உனக்கு அளவில்லாத நன்மைகள் கிடைக்கும். என்னை வழிபடுபவர்களுக்கு உன் அருள் கடாட்சமும் கிட்டும்' என்று குபேரனிடம் சிவபெருமான் கூற, குபேரனும் அவரை வெளியே எடுத்து வழிபாடு செய்தான்.
தன் பெயர் அழகேசன் என்ற நாமம் கொண்டு விளங்க வேண்டும் எனக்கேட்டுக் கொண்டான். சிவனும் சம்மதித்தார். குபேரன் வழிபட்ட அந்தச் சிவன் கோவில் பவானியில் உள்ளது. அது பவானி சங்கமேஸ்வரர் கோவில். எனவே தீபாவளியன்று இத்தலத்தில் வழிபட்டால் அளவற்ற செல்வமும் அருளும் பெறலாம். சம்பா அரிசியில் செய்த அவல் நிவேதனம் குபேரருக்கு உகந்தது. மென்மையான இழை போன்ற அவலை குபேரர் விரும்பி புசிப்பதாக ஐதீகம்.
குபேரர் கீரிப்பிள்ளையை தொடையில் வைத்து இருப்பார். செல்வச்செழிப்பில் திளைப்பவர்களுக்கு எதிரிகளால் பல இடையூறுகள் உருவாகும். விஷ ஜந்துக்களை கீரி விரட்டுவது போல, நம் இடையூறுகளை நீக்குவதைக் குறிக்கும் விதத்தில் கீரியைத் தாங்கி யிருக்கிறார்.
புதனுக்குரிய அதிதேவதையாக குபேரர் விளங்குகிறார். புதனுக்குரிய பச்சை நிறம் குபேரருக்கு விருப்பமானது.
பச்சை வஸ்திரம், பாசிப்பயறு, நாயுருவி இலை, வெண்கடுகு போன்றவற்றை குபேர ஹோமத்தின் போது இடுவர். புதனே கல்விக்குரிய கிரகம். குபேரரை வணங்கும் மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர்.
லட்சுமி குபேரன் வீட்டில் வாசம் செய்ய உதவும் வாஸ்து
குபேரருக்குரிய திசை வடக்கு. தொழில், வியாபார இடங்களிலும், வீட்டிலும் பணப்பெட்டியை வடக்குநோக்கி வைக்கலாம். குபேரரின் அருளால் தொழிலில் லாபம், செல்வம் பெருகும். வடகிழக்கு அல்லது ஈசான்ய பாகத்தில் தானியங்களைச் சேமித்து வைக்க வேண்டும். குழந்தைகள் படிக்கும் அறையை தென்மேற்கு அல்லது நிருதி மூலையில் அமைக்க வேண்டும். பாத்திரங்கள், உபயோகப் பொருட்களை அதே பாகத்தில் வைக்கலாம். தெற்கில் உணவு அறையை வைக்கலாம். வடமேற்கு பூஜை அறை வைப்பதற்கு தகுந்த இடமாகும்.
பொன் நகைகள் வைக்க வடக்கு திசையை தேர்ந்தெடுக்கலாம். தென் கிழக்கான அக்னி மூலையில் சமையல் அறையை வைக்க வேண்டும். குளிக்கும் அறை அமைக்கக் கிழக்கு தான் சிறந்த இடம். பொதுவாக மனையின் தெற்குப் பாகத்தில் குப்பைகள் சிதறும்படி விட்டு விடக்கூடாது. வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் லட்சுமி கடாட்சமும், குபேரன் ஆசியும் கிடைப்பது அரிது.