காண்டாமிருகங்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சிறப்பான நடவடிக்கை; அசாம் அரசுக்கு நடிகர் டிகாப்ரியோ பாராட்டு
அழிந்து வரும் ஒற்றை கொம்பு காண்டாமிருகங்கள் கொல்லப்படுவதற்கு எதிராக அசாம் அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்துள்ளதாக டிகாப்ரியோ கூறியுள்ளார்.
வாஷிங்டன்,
ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் காண்டாமிருங்கள் கொல்லப்படுவதற்கு எதிரான அசாம் மாநில அரசின் நடவடிக்கைகளை அவர் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை டிகாப்ரியோ வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது;-
"கடந்த 2000 முதல் 2021-ம் ஆண்டு வரை சுமார் 190 ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டதைத் தொடர்ந்து, 2021-ம் ஆண்டு இந்தியாவில் உள்ள அசாம் மாநில அரசு கசிரங்கா தேசியப் பூங்காவில், அழிந்து வரும் பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தை வேட்டையாடுவதை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுத்தது.
இந்த நடவடிக்கையின் மூலம் கடந்த 1977-ம் ஆண்டுக்குப் பிறகு, அந்த பகுதியில் முதல் முறையாக காண்டாமிருகங்கள் வேட்டையாடப்படவில்லை.
குறிப்பிடத்தக்க வகையில், காசிரங்கா தேசியப் பூங்காவில் 2,200 பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் உள்ளன. இது உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு ஆகும்.
இந்தியாவின் இந்த வெற்றி பல நல்ல செய்திகளை கொண்டு வருகிறது. ஏனெனில் அரிய காண்டாமிருகத்தின் உலக மக்கள் தொகை 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுமார் 200 இல் இருந்து சுமார் 3,700 ஆக உயர்ந்துள்ளது."
இவ்வாறு நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.