ரஷிய துணை பிரதமர் இந்தியாவுக்கு வருகை; வர்த்தக பிரதிநிதிகளை சந்தித்து பேச திட்டம்


ரஷிய துணை பிரதமர் இந்தியாவுக்கு வருகை; வர்த்தக பிரதிநிதிகளை சந்தித்து பேச திட்டம்
x

ரஷியாவின் துணை பிரதமர் மற்றும் தொழில்துறை மற்றும் வர்த்தக மந்திரியான டெனிஸ் மான்டுரோவ் இந்தியாவுக்கு இன்று வருகை தந்து உள்ளார்.

மாஸ்கோ,

உக்ரைனுக்கு எதிராக ரஷியா போர் தொடுத்துள்ள சூழலில் உலக அளவில் அதன் தாக்கம் பெருமளவில் எதிரொலித்து உள்ளது. வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளிலும் இந்த போரால் எரிபொருள், உணவு பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தலை தூக்கி உள்ளன.

இந்த நிலையில், ரஷியாவின் துணை பிரதமர் மற்றும் தொழில்துறை மற்றும் வர்த்தக மந்திரியான டெனிஸ் மான்டுரோவ் இந்தியாவுக்கு இன்று வருகை தந்து உள்ளார். அவருக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியாவில் 2 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், இந்த பயணத்தின் முதல் நாளில் ரஷியா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் ராஜாங்கபூர்வ ஆணைய கூட்டத்திற்கு (ஐ.ஜி.சி.) ரஷியா சார்பில் தலைமையேற்கிறார்.

அவர் இந்த கூட்டத்தில் வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் கலாசார ஒத்துழைப்பு பற்றி ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இரு நாடுகளின் வர்த்தக பிரதிநிதிகளையும் அவர் சந்தித்து பேச இருக்கிறார்.

இதனை தொடர்ந்து நாளை நடைபெற உள்ள இரு நாடுகளின் ராஜாங்க அளவிலான ஆணைய கூட்டத்தில் 24-வது ஐ.ஜி.சி. கூட்டம் பற்றி இறுதி முடிவு செய்யப்படுகிறது.


Next Story