ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட விவகாரம் - விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக ஜோ பைடன் உறுதி
ஜோ பைடனின் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்தில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் ஜோ பைடன் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருந்த 2009 முதல் 2016 ஆண்டு வரையிலான ஆணவங்கள் ஆகும்.
அரசின் அதிமுக்கிய, ரகசிய ஆவணங்கள் அதிபர் ஜோ பைடனின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட நிலையில் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிறப்பு ஆலோசகர் ராபர்ட் ஹுர் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த அமெரிக்க அடர்னி ஜெனரல் மெரிக் ஹார்லெண்ட் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு இதே போல் புளோரிடாவில் உள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்பின் வீட்டில் நூற்றுக்கணக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இது குறித்து அப்போது பேசிய ஜோ பைடன், இது மிகவும் பொறுப்பற்ற செயல் என விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது ஜோ பைடனின் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், தான் ரகசிய ஆவணங்களை முக்கியமாக கருதி பாதுகாப்பேன் என்பது மக்களுக்கு தெரியும் என்றும், இது தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவேன் என்றும் தெரிவித்தார்.