நூற்றுக்கணக்கான நட்சத்திரங்கள்... கொட்டி கிடக்கும் தங்கம், பிளாட்டினம்; பால்வெளி மண்டலத்தில் ஆச்சரியம்


நூற்றுக்கணக்கான நட்சத்திரங்கள்... கொட்டி கிடக்கும் தங்கம், பிளாட்டினம்; பால்வெளி மண்டலத்தில் ஆச்சரியம்
x
தினத்தந்தி 22 Nov 2022 4:49 PM IST (Updated: 22 Nov 2022 4:50 PM IST)
t-max-icont-min-icon

பால்வெளி மண்டலத்தில் உள்ள நூற்றுக்கணக்கான நட்சத்திரங்களில் கொட்டி கிடக்கும் தங்கம், பிளாட்டினம் பற்றி ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.



டோக்கியோ,


நமது சூரியன் அமைந்துள்ள பால்வெளி மண்டலத்தில் பல ஆச்சரியங்கள் நிறைந்து உள்ளன. நாம் வாழும் பூமியில், தங்கம், இரும்பு உள்ளிட்ட தனிமங்கள் காண கிடைக்கின்றன. இவற்றை மனிதர்கள் தங்களது தேவைக்கேற்ப, வெவ்வேறு மதிப்புடைய ஒன்றாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த பால்வெளி மண்டலத்தில், தங்கம், பிளாட்டினம் போன்றவை நிறைந்த நூற்றுக்கணக்கான நட்சத்திரங்களை உலகம் முழுவதும் உள்ள தொலைநோக்கிகளின் உதவியுடன் விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.

பொதுவாக, கோடிக்கணக்கான விண்மீன் கூட்டங்கள் சேர்ந்து ஒரு விண்மீன் மண்டலம் உருவாகின்றது. இப்படிப்பட்ட அந்த மண்டலங்களில் ஒன்றாக சூரிய குடும்பம் உள்ளது. இதனை பால்வெளி மண்டலம் என அழைக்கின்றனர்.

சரி. இந்த தங்கம் செறிவு கொண்ட நட்சத்திரங்கள் உருவானது எப்படி? என்பது பற்றிய ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் இறங்கியுள்ளனர். இதன்படி, அளவில் சிறிய விண்மீன் மண்டலங்களில் தற்போது காணப்படும் நட்சத்திரங்கள், ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன் உருவாகி இருக்க கூடும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பால்வெளி மண்டலத்தின் உருவாக்கம் பற்றி அறிய முற்பட்டதன் விளைவாக, இந்த நட்சத்திரங்களின் கடந்தகால வரலாறு பற்றிய ஒரு முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர்.

இதற்காக ஜப்பான் நாட்டில் உள்ள தேசிய வானியல் ஆய்வகத்தில் உள்ள சூப்பர் கம்ப்யூட்டர் உதவியுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு நிறைவடைய பல மாதங்கள் எடுத்து கொண்டது.

இதன்படி, சூப்பர் கம்ப்யூட்டரை கொண்டு பல்வேறு தூண்டுதல்களை உண்டு பண்ணி, பால்வெளி மண்டலத்தில் காணப்படும் தங்கம் செறிவு கொண்ட நட்சத்திரங்களின் உருவாக்கம் பற்றி முதன்முறையாக பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதன் பயனாக, அளவில் சற்று சிறிய, முன்னோர்களாக இருந்த விண்மீன் மண்டலங்கள் ஒன்றிணைந்து, பால்வெளி மண்டலம் வளர்ச்சி அடைந்து உள்ளது என கணிக்கப்பட்டு உள்ளது. இந்த விண்மீன் மண்டலங்கள் ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்துள்ளன. அதன்பின் உருமாற்றம் பெற்றுள்ளன. அவற்றில் அதிக எடையுள்ள தனிமங்கள் அதிக அளவில் இருந்துள்ளன.

இந்த சிறிய விண்மீன் மண்டலங்களில், ஒவ்வொரு முறையும் நட்சத்திரங்களின் இணைவு நிகழும்போது, கனம் வாய்ந்த தனிமங்களின் செறிவும் அதிகரித்தபடியே வந்துள்ளன.

இந்த ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்களில் ஒருவரான யுடாகா ஹிராய் கூறும்போது, இன்றைய தங்கம் செறிவுடைய நட்சத்திரங்கள், பால்வெளி மண்டலத்தின் வரலாற்றை நமக்கு எடுத்து கூறுகிறது.

இதன்படி, 1,000 கோடி ஆண்டுகளுக்கு முன் இந்த குள்ள விண்மீன் மண்டலங்களில், தங்க செறிவுடைய நட்சத்திரங்கள் உருவாகியுள்ளன என எங்களது குழு அறிந்துள்ளது. இந்த பழங்கால விண்மீன் மண்டலங்களே, பால்வெளி மண்டல உருவாக்கத்திற்கான அடிப்படை அலகுகளாக அமைந்துள்ளன என கூறும் ஹிராய், மற்றொரு தகவலையும் கூறியுள்ளார்.

இதன்படி, நட்சத்திரங்களின் புதைபடிவ பதிவுகளை தனியாக ஆய்வு செய்வதற்கான புதிய வழியும் பிறந்து உள்ளது. இதனால், தங்கம், பிளாட்டினம் உள்ளிட்டவை அடங்கிய இன்று நாம் காணும் நூற்றுக்கணக்கான நட்சத்திரங்கள், 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பால்வெளி மண்டல உருவாக்கத்தின்போது ஏற்பட்ட புதைபடிவ பதிவுகள் என்று ஆய்வு தெரிவிக்கின்றது.


Next Story