கனடாவில் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச்சூடு; 5 பேர் பலி
கனடாவில் அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாகினர். கொலையாளியை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
டொராண்டோ,
கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் டொராண்டோ நகரில் ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த அடுக்குமாடி குடியிருப்பில் மர்ம நபர் ஒருவர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பீதியடைந்த குடியிருப்புவாசிகள் அங்கும், இங்குமாக ஓட்டம் பிடித்தனர். மர்ம நபரின் துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.
இதனிடையே இந்த துப்பாக்கிச்சூடு குறித்த தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர். தாக்குதலில் ஈடுபட்ட நபர் யார்? அவர் அந்த குடியிருப்பில் வசித்து வந்தவரா? என்கிற தகவல்களை போலீசார் தெரிவிக்கவில்லை. அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியான சம்பவம் கனடாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.