நேபாளம்: வெடிபொருள்களுடன் சுற்றி திரிந்த இந்தியர்கள் உள்பட 6 பேர் கைது
நேபாளத்தில் வெடிபொருள்களுடன் சுற்றி திரிந்த இந்தியர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காத்மாண்டு,
நேபாள பாராளுமன்றத்துக்கு 2-வது கட்ட தேர்தல் டிசம்பர் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து, அவர்கள் நாடு முழுவதும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேபாள நாட்டின் கானிகோலா என்ற இடத்தில் சந்தேகப்படும் வகையில் சுற்றி திரிந்த ஒரு கும்பலை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.
இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் அந்த கும்பலை கைது செய்தனர். அந்த கும்பலில் 2 இந்தியர்கள் உள்பட 6 பேர் அடங்குவர். விசாரணையில், அவர்கள் அசாமை சேர்ந்த ராஜு மிஸ்ரா (23), மேற்கு வங்காளத்தின் சிலிகுரியை சேர்ந்த மொகமது பர்மான் (31) ஆகியோர் இந்தியர்கள் என தெரிய வந்தது.அவர்களிடம் இருந்து வெடிபொருள்கள் மற்றும் 1.13 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story