ஏரி நிரம்பியதால் தெப்பம் விட்டு கிராம மக்கள் வழிபாடு
ஓசூர் அருகே 20 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியதால் கிராமமக்கள் தெப்பம் விட்டும், கிடா வெட்டியும் வழிபட்டனர்.
ஓசூர்,
ஓசூர் அருகே 20 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியதால் கிராமமக்கள் தெப்பம் விட்டும், கிடா வெட்டியும் வழிபட்டனர்.
ஏரி நிரம்பியது
ஓசூர் அருகேயுள்ள எஸ்.முதுகானப்பள்ளி கிராமத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் பழமையான ஏரி உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக இந்த ஏரி தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டது. தற்போது அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஏரி நிரம்பியது. 20 ஆண்டுகளுக்கு பின் ஏரி நிரம்பியதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து நேற்று கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் குடும்பங்களுடன் ஏரிக்கரைக்கு சென்று சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர். பின்னர் அங்கு, மண்ணால் செய்யப்பட்ட மல்ராய சாமிக்கு, பெண்கள் பூஜைகள் செய்தனர். தொடர்ந்து அவர்கள் ஆடு மற்றும் கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தெப்பம் விட்டு வழிபாடு
இதில் முக்கிய நிகழ்வாக, அலங்கரிக்கப்பட்ட பெரிய தெப்பத்தில் சாமிகளை வைத்து மேளதாளங்களுடன் ஏரியை சுற்றி எடுத்து வந்தனர். பின்னர் ஏரிக்கு தண்ணீர் செல்லும் பாதையில் தெப்பம் விட்டு வழிபட்டனர். அப்போது ஏரிக்கரையில் கூடியிருந்த பொதுமக்கள் குடும்பத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். பின்னர். கிராம மக்களுக்கு சைவம் மற்றும் அசைவ உணவுகள் வழங்கப்பட்டது. இதில் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு உணவருந்தி சென்றனர்.