புவனகிரி அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
புவனகிரி அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
புவனகிரி,
புவனகிரி அருகே உள்ள வடக்கு திட்டை கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம் மகன் சிவக்குமார்(வயது 35). கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த ரம்யாகிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. மேலும் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ரம்யாகிருஷ்ணன் சிவக்குமாரிடம் கோபித்துக்கொண்டு அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
போலீசார் விசாரணை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிவக்குமார் வீட்டில் இருந்த மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவர் வலியால் அலறித்துடித்தார். இந்த சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து சிவக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டா்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி சிவக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.