நெய்யூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
நெய்யூர் அருகே வாட்டர் சர்வீஸ் நிலையத்தில் வேலைக்கு சேர்ந்த முதல் நாளில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
திங்கள்சந்தை,:
நெய்யூர் அருகே வாட்டர் சர்வீஸ் நிலையத்தில் வேலைக்கு சேர்ந்த முதல் நாளில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தொழிலாளி
அழகியமண்டபம் அருகே உள்ள திருவிதாங்கோடு பழையபள்ளி தெருவை சேர்ந்தவர் முகம்மது. இவருடைய மகன் பீர்முகம்மது (வயது 36). இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
பீர்முகம்மது கடந்த 9 ஆண்டுகளாக திருவிதாங்கோடு பகுதியில் உள்ள ஒரு ஒர்க்ஷாப்பில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பீர்முகம்மது நெய்யூர் அருகே ஆலங்கோட்டில் உள்ள ஒரு இருசக்கர வாட்டர் சர்வீஸ் நிலையத்தில் புதியதாக வேலைக்கு சேர்ந்தார்.
மின்சாரம் தாக்கியது
அங்கு அவர் ஒரு மோட்டார் சைக்கிளுக்கு வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பீர்முகம்மது தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார். இதைகண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி பீர்முகம்மதுவின் உறவினர் அன்வர் ஹூசைன் இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலைக்கு சேர்ந்த முதல் நாளில் தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.