குடும்ப தகராறில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


குடும்ப தகராறில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 5 Jan 2023 12:15 AM IST (Updated: 5 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவட்டார் அருகே குடும்ப தகராறில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

திருவட்டார்:

திருவட்டார் அருகே குடும்ப தகராறில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தொழிலாளி

திருவட்டார் அருகே உள்ள மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்த பீர்முகமது. இவருடைய மகன் அம்ஜித்கான்(வயது 40). இவர் கேரள மாநிலம் மலப்புறம் பகுதிைய சேர்ந்த ஷாகிதா என்பவரை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். முதலில் மலப்புறத்தில் அம்ஜித்கான் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்தார்.

இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு முன் அம்ஜித்கான் மட்டும் திருவட்டார் அருகே மேக்காமண்டபத்தில் ஒரு விடுதியில் வாடகைக்கு தங்கி அந்த பகுதியில் இறைச்சி வெட்டும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். மனைவியும், பிள்ளைகளும் மலப்புறத்தில் வசித்தனர்.

கணவன்-மனைவி தகராறு

இந்த நிலையில் அம்ஜித்கானின் மனைவி ஷாகிதா மலப்புறத்தில் சொந்தமாக ஒரு இடம் வாங்கினார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மனமுடைந்த அம்ஜித்கானுக்கு மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே செல்போனில் பேசியபோது மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் தகராறு முற்றியதில் இருவரும் மாறி மாறி திட்டினர். சிறிது நேரத்துக்கு பிறகு ஷாகிதா கணவர் அம்ஜித்கானை மீண்டும் போனில் தொடர்பு கொண்டபோது அவர் எடுக்கவில்லை.

தூக்கில் தொங்கினார்

இதனால் சந்தேகம் அடைந்த அவர், தனது கணவரின் தம்பியான சுல்பிகரை தொடர்பு கொண்டு இதுபற்றி கூறினார். அவர் அம்ஜித்கான் தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்தபோது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. உடனே, விடுதி உரிமையாளரிடம் மாற்றுச் சாவியை வாங்கி திறந்து பார்த்தார். அப்போது அங்கு அம்ஜித்கான் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கீழே இறக்கி பார்த்தபோது அம்ஜித்கான் இறந்தது தெரியவந்தது.

பின்னர், இதுகுறித்து திருவட்டார் போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஞானதாஸ் மற்றும் போலீசார் விரைந்து சென்று அம்ஜித்கானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த அம்ஜித்கான் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story