மழை பெய்ய வேண்டி வீடு வீடாக மழை சோறு எடுத்த பெண்கள் - பேய்க்குளத்தில் நூதன வழிபாடு...!
மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி பேய்க்குளம் பகுதியில் பெண்கள் கும்பி அடித்து நூதன வழிப்பாட்டில் ஈடுப்பட்டனர்.
சாத்தான்குளம்,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சுற்று வட்டார பகுதியில் போதிய மழை இல்லாததால் குளம் மற்றும் கிணறுகள் நீர்மட்டம் உயராமல் காணப்படுகிறது.
ஐப்பசி மாதத்திற்குள் இப்பகுதிகளில் உள்ள குளங்கள் ஓரளவுக்கு நிரம்பி விடும். ஆனால் கார்த்திகை மாதம் பிறந்தும் மழை இல்லாததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
இதனால் மழை வேண்டி பண்டைய காலங்களில் மழை சோறு எடுப்பது போல சாத்தான்குளம் அருகே பேய்குளம் பகுதியில் உள்ள பெண்கள், சிறுவர், சிறுமிகள் ஒன்று கூடி மழை பெய்யவும், குளங்கள் பெருகவும் வேண்டி வீடு வீடாக சோறு வாங்கினர். பின்னர், அவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஊர் நடுவே அனைவரும் ஒன்று திரண்டு கும்மியடித்து, குலவை பாடி, வருண பகவானை வேண்டி வழிபட்டனர்.
இதனை தொடர்ந்து, வீடு வீடாக வாங்கிய சோற்றை உருண்டை பிடித்து அனைவருக்கும் வழங்கினர்.