100 நாள் வேலை கேட்டு பெண்கள் தர்ணா


100 நாள் வேலை கேட்டு பெண்கள் தர்ணா
x
தினத்தந்தி 17 Oct 2023 12:15 AM IST (Updated: 17 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே 100 நாள் வேலை கேட்டு பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கவில்லை என கூறி ஊராட்சி தலைவர் பழிவாங்குவதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கடலூர்

விருத்தாசலம்:

விருத்தாசலம் ஒன்றியத்துக்குட்பட்ட குப்பநத்தம் ஊராட்சியில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தனலட்சுமி அய்யாசாமி தரப்பினருக்கும், தோல்வியுற்ற வரதராஜன் தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது.

இதன் காரணமாக வரதராஜன் தரப்பு மக்கள் வசிக்கும் பகுதியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளவில்லை எனவும், அந்த பகுதி மக்களுக்கு கடந்த 3 ஆண்டாக 100 நாள் வேலை வழங்கவில்லை எனவும் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

பெண் தொழிலாளர்கள் தர்ணா

கடந்த 2-ந் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில் 100 நாள் வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து வேலை செய்வதற்காக உத்தரவு வந்த நிலையில் நேற்று பெண் தொழிலாளர்கள் பணிக்கு சென்றனர். ஆனால் அவர்களை வேலை செய்யக் கூடாது என்று ஊராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பெண் தொழிலாளர்கள், அப்பகுதியிலேயே பந்தல் அமைத்து 100 நாள் வேலை திட்ட அட்டை, வேலை செய்ய பயன்படுத்தப்படும் உபகரணங்களை வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழிவாங்கும் நடவடிக்கை

இது பற்றி தகவல் அறிந்ததும் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெண்கள், உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கவில்லை என்று கூறி எங்களுக்கு 100 நாள் வேலை வழங்காமல் பழிவாங்கும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினர்.

அதற்கு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story