புதுக்கோட்டை அருகே வழிப்பறி புகாரில் பெண் இன்ஸ்பெக்டர் பணி நீக்கம்


புதுக்கோட்டை அருகே வழிப்பறி புகாரில் பெண் இன்ஸ்பெக்டர் பணி நீக்கம்
x

வழிப்பறி வழக்கில் சிக்கிய நாகமங்கலம் புதுக்கோட்டை பெண் இன்ஸ்பெக்டர் வசந்தி காவல் துறையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை,

கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாகமலை புதுக்கோட்டை பகுதி இன்ஸ்பெக்டராக இருந்த வசந்தி வழிப்பறியில் ஈடுபட்டதாக இரு முறை கைது செய்யப்பட்டார். அவரை தற்போது காவல் துறையில் இருந்தே நிரந்தரமாக நீக்கி மதுரை சரக டி.ஐ.ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்த அர்ஷத் எனும் பேக் தயாரிக்கும் தொழில் புரியும் நபர், தனது வியாபாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்க கடந்த 2021 ஜூலை 5ம் தேதி ரூ.10 லட்சம் பணத்துடன் மதுரைக்கு வந்துள்ளார். அப்போது நாகமலை புதுக்கோட்டை பகுதியில் தனது நண்பர் ஒருவரை பார்க்க சென்றார்.

அப்போது, நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளராக பணிபுரிந்த வசந்தி எனும் பெண் இன்ஸ்பெக்டர், தனக்கு தெரிந்த பால்பாண்டி, பாண்டியராஜன், உக்கிரபாண்டி, சீமைச்சாமி ஆகியோருடன் சேர்ந்து, அர்ஷத்தை மிரட்டி அவரிடம் இருந்த 10 லட்ச ரூபாய் பணத்தை வழிப்பறி செய்துள்ளார். அந்த பணத்தை காவல் நிலையம் சென்று அர்ஷத் திருப்பி கேட்ட போது பொய் வழக்கு போட்டுவிடுவதாக கூறி அவரை மிரட்டி அனுப்பியுள்ளார்.

இதனால் அர்ஷத், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் காவல் ஆய்வாளராக பணிபுரிந்த வசந்தி மீது புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து, ஆய்வாளர் வசந்தி தலைமறைவானார். அவரை தனிப்படை அமைத்து தேடி கோத்தகிரியில் வைத்து தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர்.

அதன் பிறகு ஜாமீனில் வெளியே வந்த அவர் புகார் கொடுத்தவரை மிரட்டிய புகாரின் பெயரில் மீண்டும் அவரது வீட்டில் வைத்தே கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து, தற்போது காவல் ஆய்வாளராக இருந்த வசந்தியை காவல் துறையில் இருந்து முழுதாக நீக்கி (டிஸ்மிஸ்) மதுரை சரக டி.ஐ.ஜி உத்தரவிட்டுள்ளார்.


Next Story